பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அயில்வேலன் கவி

1

உபதேசம்

கா ஞானிகள் தம்மைச் சார்ந்தவர்கள் இன்பம் அடைய வேண்டுமென்று பல வகையிலே உபதேசம் செய்வார்கள். அவர்கள் தம்முடைய சிஷ்யர்களுக்கு மந்திரோபதேசம் செய்வதன் மூலம் அருள் பாலிக்கலாம். கண்களினால் அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஞானம் உண்டாகும்படியும் செய்யலாம். அவர்களைத் தொட்டு அருள் ஊட்டலாம். நலம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தும் அருளை வழங்குவது உண்டு இவையாவும் அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த மக்களுக்குத்தான் பயன்படும். தம் காலத்தில் வாழாத மக்களுக்கும் பயன்படும் வகையில் அருணகிரிநாதரும் அவரைப் போன்றவர்களும் பாமாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார்கள். அவற்றின் வாயிலாக நாம் பெறும் உபதேசங்களும் அறிந்து கொள்ளும் நுட்பங்களும் பல.

அதிகாரி

'பதேசம் பெறுவதற்கு இன்னார் அதிகாரி என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும், இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம்.

அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் இந்த முறையில் பாமாலையைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே!" என்ற போக்கில் சொல்லி, அந்தத் தகுதி இன்னதென்று புலப்படுத்துகிறார்.