பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நாக்கிலே பேசுகிறோம். அதனால் இந்தப் பாட்டு இன்றும் நமக்குப் பயன் தருவது.

இந்தப் பாட்டில், காலனை வெல்ல வேண்டுமென்றால் நன்றாக எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். எதைக் கற்பது? கவியை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும். எந்தக் கவியை அயில் வேலன் கவியை. எழுத்துப் பிழையறக் கற்றால் போதாது. அன்போடு எழுத்துப் பிழையற அயில் வேலன் கவியைக் கற்க வேண்டும். அப்படிக் கற்றால் காலனை வென்று விடலாமாம்.

இதனை எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஞானசக்தி


   அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன்
அழித்து என்றால் மீட்டும் என்று பொருள். உலகத்தில் பிறந்த அத்தனை பேரும், உடம்பைப் பெற்றவர்கள். அவர்கள் உடம்புக்குள்ளிருந்து உயிர் என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே ஆக வேண்டும். அதுதான் மரணம். அந்த உயிர் வேறு பிறவி எடுக்கிறது. ஆனால் இறைவன் அருள் பெற்றவர்கள் மீட்டும் பிறக்க மாட்டார்கள். மீட்டும் இந்தப் பிறவியை பெறாதபடி செய்பவன் அயில் வேலன். அயில் வேல் என்பதற்குக் கூர்மையான வேல் என்று பொருள். முருகன் கையிலுள்ள வேலை ஞானசக்தி என்பார்கள். இறைவனிடத்தில் இருக்கும் சின்னங்கள் எல்லாம் சில சில தத்துவங்களை நினைப்பூட்டுபவை. முருகன் கையிலுள்ள வேல் ஞானத்தைக் காட்டுகிறது. ஆன்மாக்களைப் பற்றியுள்ள அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானசக்தியே வேல்.

அஞ்ஞானம் அல்லது அவித்தையினால் நாம் உலகத்தில் பிறக்கின்றோம். அவித்தை அழிந்தால், அறியாமை ஒழிந்தால், பிறப்பு ஒழியும். ஞானமே ஆண்டவன் திருக்கரத்தில் வேலாக இருக்கிறது. அந்த ஞான வேலினால் அஞ்ஞானம் தொலையும்; அதனால் பிறவி போகும்.

இவற்றை மனத்தில் நினைத்தே, "அழித்துப் பிறக்க வொட்டா அயில்வேலவன்" என்றார். அவனுடைய கவியைக்

76