பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

விளையாடல்களை உணரத் தொடங்கினார். பக்தி ஆர்வம் பொங்க, ஏதோ ஒரு வகையான அமைதியும் இன்பமும் உண்டாயின. அந்த அநுபவ நிலையிலேயே நின்றார். பகல் தெரியவில்லை; இரவு தெரியவில்லை; நாள் போனது தெரியவில்லை; வாரம் போனதும் தெரியவில்லை. அரசனிடம் போக வேண்டுமென்ற எண்ணங்கூடத் தோன்றவில்லை.

அரசன் பார்த்தான். வாரம் தப்பினாலும் குறித்த நாள் தப்பாமல் வந்து கொண்டிருந்த பெளராணிகரைக் காணவில்லையே என்று எண்ணி அவர் இருந்த இடம் தேடி அரசனே வந்தான். வந்து பார்த்தால் ஒரே கண்ணன் மயமாக ஆகிக் கண்ணனையே தம் ஒளிமிக்க கண்களினாலே பார்த்துக் கொண்டு, வாய் அடைத்து உட்கார்ந்திருக்கும் நிலையிலே பெளராணிகர் இருந்தார்.

"சுவாமி, தாங்கள் இப்போது பாகவதத்தைச் சொல்லுங்கள்" என்று அரசன் அவர் காலிலே வீழ்ந்தான். ஆனால் அவர், "அரசே, நான் சொல்வது என்ன இருக்கிறது! தாங்களே எனக்குக் குரு" என்று அவர் காலிலே வீழ்ந்தார். அவர் அநுபவ ஞானி ஆகிவிட்டார்.

இந்த அநுபவ ஞானத்தை அபரோக்ஷ ஞானம் என்று சொல்வார்கள்; பரஞானம் என்பதும் அதுதான். நூல் அறிவினாலே வருகின்றது அபரஞானம், அல்லது பரோக்ஷ ஞானம்.

கற்றதனால் ஆய பயன் என்ன? இறைவன் நற்றாள் தொழுவது தானே? கற்க வேண்டும். அது இன்றியமையாததே. அதைவிட முக்கியமானது கசடறக் கற்றபின் அதற்குத் தக நிற்பது; அதாவது அநுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே, ஆண்டவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும்; அநுபவ முதிர்ச்சி உண்டாகும்படி கற்க வேண்டும்; பிழையில்லாமலும் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில் இன்றியமையாதது அன்பு. அது வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள எத்தனையோ கவிகள் உண்டு. ஆனால் அன்போடு கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிய கவியாக இருக்க வேண்டும்; அயில் வேலன் கவியாக இருக்க

80