பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

வேண்டும். தாம் பாடிய கவியை மாத்திரம் நினைந்து, அருணகிரிநாதர் இப்படிச் சொல்லவில்லை. அவருக்கு முன்னாலே தோன்றிய நக்கீரர் முதலிய பெரியார்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், ஞான சம்பந்தர் முதலியவர்கள் சிவபிரானைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள். அப்பெரியார்கள் இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பல பல பாடல்கள் பாடியிருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இந்தப் பாட்டைப் பாடினார்.

தமிழர் வாழ்வில் பாட்டு

மிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே கவிகளால் அமைந்தவை. “பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை" என்பது பெரிய புராணம். தமிழ் நாட்டில் பாட்டுக்குப் பெருமை அதிகம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு: குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு: குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு; குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு; கல்யாணம் வந்தால் நலங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு; கடைசியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வைப் பாட்டினால் அளக்கிறார்கள். அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் கால ஜயம் பண்ண முடியாது.

கவிகளைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால் எந்தக் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும்? அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும்.

81