பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கள் சந்தோஷப்படமாட்டார்கள்; அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள்.

அப்படியானால் குழந்தை பேசும் மழலையில் இனிமை உண்டாக என்ன காரணம்? அடுத்தடுத்த வீடுகளில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு வயசு ஆன பின்பு ஒரு குழந்தை 'பாபா' என்கிறது; 'மாமா' என்கிறது; மழலையாகப் பொரிந்து தள்ளுகிறது. மற்றொரு குழந்தையோ 'பூ பூ பூ' என்கிறதே தவிர எழுத்தின் ஒலியை வெளியிட மாட்டாமல் திணறுகிறது. அதைக் கேட்டு, 'ஐயோ! இது ஊமை போல இருக்கிறதே!' என்று பெற்றோர்கள் கதிகலங்கிப் போகிறார்கள். "மாமா" என்று சொல்லுகிற குழந்தையின் தாய் அதனைக் கேட்டு மிகவும் மகிழ்வதற்குக் காரணம், தன் குழந்தை ஊமை அல்ல, இனி நன்றாகப் பேசும் என்ற நம்பிக்கையை அந்த மழலை அவளுக்கு உண்டாக்குவதுதான். அதனால் அது அவளுக்கு இனிக்கிறது. ஒரு விதையை நட்டால் முளை வெளியே வந்தவுடன் அது இனிச் செடியாகி நன்றாக வளரும் என எண்ணி மகிழுவது போல, அந்த மழலைச் சொல்லைக் கேட்டவுடன், இனி நன்றாக வளர்ந்து அழகாகப் பேசும் நிலையை அக்குழந்தை அடைந்து விடும் என்று எண்ணிக் களிப்படைகிறாள்.

ஆகவே மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெரும் வரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. பேச்சிலும் நல்லது, பொல்லாதது உண்டு.

பேச்சிலே சிறந்தது

ழலை, பேச்சுக்கு முளையாதலால் இன்பத்தை உண்டாக்குகிறது. தீமை இல்லாததால் விரும்பிக் கேட்கிறோம். மழலை வளர்ந்த பேச்சும் குழந்தை பேசுவதுபோலத் தீமை இல்லாமல்

84