பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

என்று அப்பர் அருளியிருக்கிறார். அவ்வாறு வாய் படைத்தவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்தாவிட்டால் ஆண்டவன் என்ன செய்வான்? "போன பிறப்பில் இவனுக்கு அழகாகப் பேசக் கூடிய வாயைக் கொடுத்தோம். இவன் அதை நன்கு பயன்படுத்தாமல் இன்னாதன கூறி, பிறர் மனத்தைப் புண்படுத்தி வாழ்ந்தான். புறங்கூறிப் பெரிய பெரிய சண்டைகளைக் கிளப்பி விட்டான். பொய் கூறினான். வழவழவென்று பயனற்ற வம்புப் பேச்சைப் பேசினான். இவனுக்கு வாய் கொடுத்துப் பயன் இல்லை. இவன் வாயில்லாப் பிராணியாகவே போகட்டும்" என்று செய்து விடுகிறான்.

நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும், அந்த வாயையும், நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன்? இராமலிங்க சுவாமிகள்,
   "எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
   ஏக்கற் றிருக்கும்வெறு வாய்”
என்று வருந்திச் சொல்கிறார்.

யாரைப் புகழ்வது?

கவே நாவை நமக்கு இறைவன் கொடுத்ததற்குக் காரணம் என்ன? நம்முடைய கடமை என்ன? வாய் கொடுத்த இறைவனை வாழ்த்துவது நம்முடைய முதற் கடமை. நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினாலா? அப்படி அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் நம்முடைய கடமை அது. நாம் நம்முடைய நாவைக் கொண்டு மற்ற மக்களைப் புகழ்ந்து பேசினால் அவர்களுக்கு இன்பம் உண்டாகும். ஆனால் அவரிடம் விருப்பம் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாகும். நாலு பேர் இருக்கும்போது ஒருவரைப் புகழ்ந்தால் மற்ற மூவரும், "நம்மை இவன் புகழவில்லையே!” என்று எண்ணக் கூடும். எல்லோரையும் புகழ வேண்டுமென்றால் இந்த நாவினாலே முடியாது; ஆயிரம் நா நமக்கு இருந்தாலும் முடியாது. ஆகவே, யார் நமக்கு உபகாரம் செய்கிறார்களோ அவர்களைப் புகழ்கிறோம். உபகாரம் செய்பவரைப் புகழ

க.சொ.1-7

89