பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இப்படியே ஆணின் தன்மை ஆண்மையாகும். ஆண்மை என்ற சொல்லுக்கு வீரம் என்று பொருள். ஆண்டவனுடைய இயல்புகளுள் வீரம் தலை சிறந்தது என்பது இதனால் தெரிய வரும். பெண்ணால் காதலும் ஆணால் வீரமும் வளர்கின்றன. பெண்ணின் காதலை ஆணின் வீரம் பாதுகாக்கிறது. ஆணும் பெண்ணுமாக மக்கள் உருக்கொண்டு வாழும் உலகத் தில் வீரமும் காதலும் வாழ்க்கையை அரண் செய்து இன்பத்தை ஊட்டுகின்றன. வீர வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் கவிஞ ரால் காப்பியங்களில் சிறப்பாக வருணிக்கப் பெறுகின்றன. வீரமுருகன் முருகன் வீரத்தைப் பாதுகாக்கும் தெய்வம்; வீரம் நிறைந்த தெய்வம். அவன் தேவர் படைத் தலைவன். போர் பல செய்து வெற்றி பெற்றவன். அவன் திருக்கரத்தில் உள்ள வேல் அவன் வீரச் சிறப்புக்கு அடையாளமாக இலங்குகிறது. படைகளுக்குள் வில், வாள், வேல் என்பவை சிறந்தவை. அவற்றிலும் வேல் சிறந்தது. அதனைக் கைக்கொண்ட முருகன் பெரிய வீரன். 'பெருவிறல் மள்ள" என்று திருமுருகாற்றுப்படை அவனைப் போற்றுகிறது. காதலிற் சிறந்த முருகன் வீரத்தில் சிறந்து நிற்பது போலவே முருகன் காதலிலும் சிறந்து நிற்கிறான். காதலைப் பாதுகாக்கும் தெய்வம் அவன். வள்ளியெம்பிராட்டியிடம் காதல் சிறந்து நின்ற பேரழகன் அவன். வீரமும் காதலும் சிறந்த முருகனை, "மங்கையர் கணவ, மைந்தர் ஏறே" என்று நக்கீரர் பாராட்டுகிறார். காதற் சிறப்பை அவன் அணிந்த மாலை காட்டுகிறது. அவன் வெவ்வேறு வகையான மாலைகளை அணிவதுண்டு. அவனுக்கு அடையாள மாலை காந்தள். அவனுடைய காதலுக்கு அடையாளமாக இருக்கும் மாலை கடம்பு. அதைப் போகத்துக்கு உரிய மாலை என்று நச்சினார்க்கினியர் சொல்வார். 104