பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை முருகனது வீரப் பெருமையை அவன் திருக்கரத்திலுள்ள வேலும், காதற் பெருமையை அவன் திருமார்பில் அணிந்த கடம்ப மாலையும் புலப்படுத்துகின்றன. அந்த இரண்டையும் ஒரு சேர நினைக்கிறார் அருணகிரிநாதர். சொன்ன க்ரவுஞ்ச கிரிஊ டுருவத் தொளைத்தவைவேல் மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! வேல் முதலில் வேலைப்பற்றிச் சொல்கிறார். அது கிரெளஞ்ச மலையைத் துளைத்தது; அதனூடே புகுந்து உருவியது. யானை, குதிரை முதலியவற்றையும் காலாளையும் ஊடுருவிச் செல்வது எளிது. குருதியும் தசையும் உள்ள உடம்புகளாதலின் பச்சை மரத்தில் ஆணி இரங்குவது போல வேல் புகுந்துவிடும். ஆனால் கிரெளஞ்ச மலை பாறையாக இருப்பது. அம்பும் வேலும் தன்பால் வந்து மோதினால் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்யும் வன்மையை உடையது அந்த மலை. அது சொர்ண மயமானது என்று அருணகிரியார் சொல்கிறார். 'பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன்' என்று கந்தர் அலங்காரத்திலும், 'கனகக் கிரியைப் பொரும்வேலா! என்று திருப்புகழிலும் கிரெளஞ்ச மலையைத் தங்கமலை என்று பாடியிருக்கிறார். வெள்ளி மலையாக இருப்பதே தன் மாயத்தால் தங்க மலையாகவும் நிற்கலாம். கந்தபுராணத்தில் உள்ள வரலாறுகள் வெவ்வேறு வகையாக வழங்கி வருகின்றன. பழங்காலத்தில் முருகனைப் பற்றி வழங்கிய வரலாறுகள் பல பிற்காலத்தில் மறைந்தன. புதிய வரலாறுகள் எழுந்தன. பிற நூல்களில் காண இயலாத பல வரலாறுகள் அருணகிரியார் வாக்கில் வரும். அப்படி உள்ளவற்றில் ஒன்று, கிரெளஞ்ச மலை பொன் மயமானது என்பது. iO5