பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


   அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.


   தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர் அலங்காரத்தில், முருகன் சிற்றடி, "என்பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார். அவர் சொல்லுகிற அடி ஏடு அவருடைய உள்ளம். முருகனுடைய சின்னஞ்சிறிய குழந்தைத் திருவடி அவர் உள்ளத்திலே பதிந்ததாம். அதிலிருந்து பாக்கள் வந்தனவாம். கந்தர் அநுபூதியில்,
   "யாம்ஒ தியகல் வியும்எம் அறிவும்
   தாமே பெறவே லவர்தந் ததனால்" என்று பாடினார். அவர் உள்ளத்தில் இறைவன் திருவடி பட்டது. அதன் விளைவாக அவர் நாவின் வழியே பாக்கள் வெள்ளமாகப் பெருக்கெடுத்தன.


   முருகன் திருவருளால் பெற்ற புலமையை அவனுக்கே அர்ப்பணமாக்கினார்.
   “அருணதள பாதபத்மம் அதுநிதமு மேதுதிக்க
    அரியதமிழ் தானளித்த மயில்வீரா" என்று பாடுகிறவர் அல்லவா?


   இந்தப் புத்தகத்தில் "தாவடி யோட்டு மயிலிலும்" என்ற கந்தரலங்காரப் பாட்டு இருக்கிறது. அதில்தான் "என் பாவடியேட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார்.