பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 புனிதவதி என்ற பெயருடைய அப்பெருமாட்டியார் பிறந்து மொழி பயின்ற போதிலிருந்தே சிவபெருமானத் தவிர வேறு யாரையும் நினைக்காதவர். ஆண்டவனிடம் இடையறாத பக்தி இளமைப் பருவத்திலிருந்தே வளர்ந்தது. அம்மையாருக்கு முறைப் படி திருமணம் ஆயிற்று. பரம தத்தன் என்ற அவருடைய நாயகன் ஒரு நாள் கடையிலிருந்து இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். பிற்பகல் இரண்டு மணிக்கு அவன் கடையிலிருந்து வீட்டிற்குச் சென்று சாப்பிடுவது வழக்கம். தம் நாயகனுக்காக அந்த அம்மையார் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ஒரு சிவனடியார் மிகவும் பசியான இருக்கிறது என்று வீட்டிற்கு வந்தார். அவருக்கு உணவு படைக்க வேண்டுமென்பது புனிதவதியாரின் எண்ணம். காய்கறிகள் இன்னும் சமைக்கவில்லை. அன்னம் ஒன்றுதான் வடித்து இறக்கி வைத்திருந்தார். சிவனடி யாரோ மிக்க பசி என்கிறார். அம்மையார் என்ன செய்வார்? அன்னத்தைப் பரிமாறி ஒரு மாங்கனியையும் படைத்து, அவரை உபசரித்து அனுப்பி விட்டார். பிற்பகல் இரண்டு மணிக்கு அவருடைய நாயகன் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு உணவு படைத்து, மீதியிருந்த ஒரு மாங்கனியை யும் கொண்டு வந்து வைத்தார். அந்த மாங்கனியைச் சுவைத்த வன், “இது மிகவும் நன்றாக இருக்கிறது. இரண்டு பழம் வாங்கி அனுப்பினேனே, மற்றதையும் கொண்டு வந்து போடு' எனச் சொன்னான். புனிதவதியார் மற்றொரு மாங்கனிக்கு எங்கே போவார்? அதைத்தான் சிவனடியாருக்குப் படைத்து விட்டாரே! அதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் உள்ளே போனவர், இறைவனை நினைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டார். இறைவன் அருள் அப்போது வெளிப்பட்டது. அவர் கையில் ஒரு மாங்கனி விழுந்தது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தவராய், அதைக் கொண்டு போய் நாயகனுக்குப் படைத்தார். அதைச் சுவைத்துத் தின்றான் அவன். அது தனிச் சுவையாக இருந்தது. "இது நான் அனுப்பிய பழம் அன்று. இதைப் போன்ற சுவையுள்ள பழத்தை நான் இது வரையில் பார்த்ததே இல்லை. இந்தப் பழம் உனக்கு எது?” என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான். அம்மையார் நடந்த வரலாற்றையும், அந்தப் பழத்தைக் கொடுத்தவன் இறைவன் என்பதையும் கூறிவிட்டார். 126