பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


"அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்
சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே"

என்று சொல்கிறார்.

தம்முடைய நிலை மிக உயர்ந்ததாக இருந்தாலும் மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற கருணை உள்ளவர் அருணகிரிநாதர். அவர்கள் நிலையையே தமதாக எண்ணிப் பாடும் இடங்கள் பல. சற்றே உயர்ந்த பக்குவ நிலையில் இருப்போர் பாடுவதாகச் சொன்னது மேலே சொன்ன பாட்டு. பெரும்பாலான மக்கள் அந்த நிலையில் இல்லை. பாசத்துட் கட்டுப்பட்டு ஐம்பொறிகளின் போக்கிலே மனத்தை அலைய விட்டுச் சுழன்று திரிகிறவர்களே பலர். அவர்களுக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டும். அவர்களோ தமக்கு இன்ன அல்லல் வந்திருக்கிறது என்பதையே தெரிந்து கொள்ளாமல் உழல்கிறார்கள்; ஐம்பொறி களுக்கு அடிமையாகி உலக அரங்கில் ஆடுகிறார்கள்.

வாழ்க்கையை நாடகமாகச் சொன்னவர்கள் உண்டு. அருணகிரியாரும் ஒரு வாழ்க்கைக் கூத்தைக் காட்டுகிறார். ஒருவர் திரைக்குப் பின் இருந்து ஆட்டப் பாவைகள் ஆடும் கூத்து ஒன்று உண்டு; அதற்குப் பாவைக் கூத்து என்று பெயர். ஐந்துபேர் ஆட்ட ஒரு பாவை ஆடுகிற கூத்து வாழ்க்கைக் கூத்து. நெஞ்சாகிய ஒன்று ஐவருடைய செயலுக்கு உட்பட்டுச் சுழலுகிறது. இத்தகைய கூத்துக்கு ஆட்பட்டு நான் திண்டாடுகிறேன்; என்னை ஈடேற்ற வேண்டும், முருகா! என்று வேண்டுகிறார் அருணகிரியார்.

“குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும்
ஐவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்"

என்பது அந்த வேண்டுகோள். 'நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு, என்னை மறந்திருந்தேன்' என்று சொன்னவரே இப்படிச் சொல்கிறார். இந்தப் பிரார்த்தனைப் பாட்டு, கந்தரலங்காரத்தில் 14-ஆவது பாட்டு. "என்னை மறந்திருந்தேன்" என்ற அநுபவப் பாட்டு 19-ஆவது பாடல்.3