பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு உடம்போடு சம்பந்தப்பட்ட சொத்துக்கள், உடம்போடு சம்பந்தப் பட்ட வாழ்க்கை ஆகிய எல்லாவற்றையும் பிரிகிறோமே என்று எண்ணி மனம் துன்புறுகிறது; இனிப் போகிற இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை உண்டாகிறது. தண்ணிர் இல்லாக் காட்டில் ஓர் அதிகாரி இருக்கிறார். அவர் மேலதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கியவர். அவருக்கு மாற்றலாகிறது. அதனால் அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார். மற்றொருவர் தஞ்சை ஜில்லாவில் இருக்கிறார். அவருக்கு மாற்றலாகிறது. ஆனால் மாற்றலாகி விட்டதே என மிகவும் கவலைப்படுகிறார். "ஐயோ! வேறு ஊருக்குப் போய்ச் சேர வேண்டுமே!’ என்று துன்பப்படுகிறார். இருவருக்கும் மாற்றல் என்பது பொதுவானது. ஆனால் ஒருவர் உள்ளத்தில் மகிழ்ச்சியும், மற்றவருக்குத் துக்கமும் உண்டாகக் காரணம் என்ன? தண்ணீர் இல்லாக் காட்டில் இத்தனை நாள் மிகவும் துன்புற்றோம். இப்பொழுதாவது நல்ல இடத்திற்கு நம்மை மாற்றினார்களோ என்று எண்ணி, இருக்கும் இடத்தைவிடப் போகிற இடம் நல்லது என்ற நினைப்பினால் அதை வரவேற்கிறார் ஒருவர்; அதனால் அவர் சந்தோஷப்படுகிறார். மற்றவரோ, 'இத்தனை நாள் மிகவும் மகிழ்ச்சியாக இந்தத் தஞ்சை ஜில்லாவில் இருந்து கொண்டிருந்தோம். நம்மைத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு மாற்றிவிட்டார்களே! அங்கே போய் எத்தனை துன்பப்பட வேண்டுமோ தெரியவில்லையே! என்று எண்ணி வருந்துகிறார். அதே போல நாம் இந்த உடம்பை விட்டுப் போகும் போது, போகிற இடம் நல்லதாக இருக்குமென்று தெரிந்து கொண்டால் போகத் தயாராக இருப்போம். இனி வருகின்ற பிறவியில் நமக்கு இதைக் காட்டிலும் சிறந்த இன்பம் உண்டு என்ற நிச்சய புத்தி உடையவர்கள் இந்த உடம்பை விடுவதால் துன்பப்பட மாட்டார்கள். கரும்பு போட்டவன் "கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர்' என்பது நாலடியாரில் வரும் பாட்டு. 141