பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 முத்தமிழ் அவன் தமிழில் அளவிறந்த காதல் உடையவன். முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன். தமிழ் மூன்று; இயல், இசை, நாடகம் என்று சொல்வார்கள். இலக்கியம் இலக்கணம் எல்லாம் இயல் தமிழைச் சார்ந்தவை. சங்கீத சம்பந்தமானது இசைத் தமிழ். நாடகத்திற்கு உரியது நாடகத் தமிழ். இந்த மூன்று தமிழிலும் அடிப்படையானது இயல் தமிழ். அதன் பின் வளர்ந்தது இசைத் தமிழ். அது விரிந்து அமைந்த பின் படர்ந்தது நாடகத் தமிழ். இசைத்தமிழில் இயல் தமிழும் கலந்திருக்கும். சாகித்தியம் இல்லாமல் பாட்டு இல்லை. வெறும் ராகம் பாடினால் அது மட்டும் சங்கீதம் ஆகாது. “பண் என்னாம் பாடற் கியைபின்றேல்." (குறள்) சாகித்தியத்தோடு பண் சேரும்போதுதான் சுவை உண்டாகிறது. இறைவன் புகழை மனம் கொள்ளுமாறு, எல்லோருடைய உள்ளமும் உருகிக் கரையுமாறு ஒரு பாட்டு இருக்கிறது என்றால், அதில் அந்த உருக்கத்தை உண்டாக்கும் பொருளை உடைய சாகித்தியம் அல்லது இயல் சிறப்பாக இருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். இயல் தமிழைக் காட்டிலும், இயலும் இசையும் சேர்ந்த இசைத்தமிழ் மிக்க பயனைத் தருகிறது. நாடகத் தமிழில் இயல் தமிழும், இசைத் தமிழும் கலந்திருக்கும். நாடகத் தமிழ் பரமசிவனைப் போல் உள்ளது. பிரம்மா படைக்கும் காரியம் மாத்திரம் செய்வார். திருமால் படைத்தல், காத்தல் இரண்டையும் செய்கிறார். சிவபிரனோ படைப்பார், காப்பார், துடைப்பார். பிரம்மாவுக்கு ஒரு தொழில். திருமாலுக்கு இரண்டு தொழில். பரமேசுவரனுக்கு மூன்று தொழில். இயல் தமிழ் தனித்திருப்பது. இசைத்தமிழ் இயல் இசை இரண்டும் கலந்தது. நாடகத் தமிழில் இயல், இசை, நாடகம் மூன்றும் உள்ளன. இவை மூன்றும் பழங்காலத்தில் சிறப்பாக இருந்தமையினால் முத்தமிழ் என்று தமிழைப் பாராட்டிச் சொல்வது வழக்கம். 158