பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


       "வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி
              வறிஞர்க்கென்றும்
       நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்"

என்று வசதியில்லாதவர்களும் அறம் செய்யும் முறையைச் சொல்லித் தருகிறார்.

பொருளைப் பிறருக்கு ஈவதுதான் அதனை ஈட்டுவதற்குப் பயன். ஈயாமல் ஈட்டித் தொகுக்கும் பொருளாலே இம்மையிலும் பயன் இல்லை; மறுமையிலும் பயன் இல்லை.

"வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின்
வெறுநிழல் போல்
கையில் பொருளும் உதவாது காணும்
கடைவழிக்கே"

என்றும்,

"உங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ணவொட்
டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு,
மோதும் அடிப்பிறகே'

என்றும் பாடுவது காண்க.

உலகில் நன்றாக வாழவேண்டுமானால் முருகனைப் பணிந்து அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்மறைமுகமாகக் குறிப்பிக்கிறார்.

"கோழிக் கொடியன் அடி பணி
யாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள்!"

அமைதியுடைய வாழ்வே வாழ்வாகையால், அமைதியைத் தரும் இறையன்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நன்றாக வாழ்வதாக எண்ணுகின்ற வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை; இறுதியில் சாவிலே முடியும் வாழ்க்கை, வளர்த்த ஆசைகளையும் வளர்த்த உறவுகளையும் வளர்த்த தாபனங்களின் மேல் உள்ள பற்றையும் வளர்த்த உடம்பையும் சுடுகாட்டிலே பொசுக்கிவிடும் வாழ்க்கை.

5