பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 உள்ளத்தடத்தில் பேயாக நடம் புரிகின்ற அச்சத்தை விரட்டி அடித்தால், நிச்சயமாக நலிவு இல்லை. எமனை விரட்டக்கூடிய ஆற்றல் உண்டாகிவிடும். ஒரு பெரிய கோபுரத்தின் மேல் ஏற வேண்டுமென்றால் மெல்ல மெல்ல ஒவ்வொரு படியாகத்தானே ஏறியாக வேண்டும்? அந்தப் பெரிய ஆற்றலைப் பெறுவற்கு நாம் ஒவ்வொரு படியாக முன்னேற வேண்டும். அதற்கு உதவுபவை பெரியவர்களுடைய வாக்குகள். அருணகிரிநாதப் பெருமானுடைய வாக்கும் நமக்கு அவ்வாறே பயன்படுகிறது. உடம்பை எடுத்த பின் நாம் ஒவ்வொரு கணமும் படுகின்ற கவலைகள், அஞ்சுகின்ற அச்சங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உடம்பையே அழிக்கும் எம பாசமாக வருகின்றன. தேர் பிடித்து இழுக்கும் வடம் அப்படியே விளையவில்லை. உரிமட்டை நார்களின் துரும்புகள் பல சேர்ந்து முறுக்கி முறுக்கி அவ்வளவு பெரிய வடமாக மாறுகின்றன. அது போலவே நாம் செய்கின்ற தீங்கான காரியங்கள் எல்லாம் நமது உள்ளத்தில் பலவீனத்தை அளித்து, அந்தப் பலவீனங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து முறுக்கு ஏறும்போது, எமபாசமாக வருகிறது. இந்தப் பாசக் கயிற்றை அறுக்க வேண்டுமானால், உள்ளத்தில் நம்பிக்கை உண்டாகி, அந்த நம்பிக்கை உரம் பெற்றுப் பெரிய வடமாக வேண்டும். அப்போது அந்த வடம் நம்மைப் பற்றி இழுத்து, ஆண்டவனுடைய சந்நிதானத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடும். அது ஒரு நாளில் சாத்தியமாவது அன்று. முதலில் அழிவை நோக்கி நம்மைப் பிடித்து இழுக்கும் பாசக் கயிறு அறவேண்டும். அதற்கு முன் உள்ளத்தில் கிலி நீங்கித் தைரியம் விளைய வேண்டும். தைரியத்தை உண்டு பண்ணும் முருகப் பெருமானின் அடியிணைகளைப் பற்ற வேண்டும். அவன் அன்பு ஏற ஏற மனம் உறுதி பெறும். இறைவன் அடியைப் பற்றி இத்தகைய தைரியம் அடைந்து, எமனைக் கண்டு அஞ்சமாட்டோம் எனக் சொன்ன ஞானிகள் பலர் உண்டு. அவர்களைப் போலவே அருணகிரியார் சொன்னா லும் பிறர் சொல்வது போலச் சொல்லாமல் புதிய முறையில் எமனைப் பார்த்தே சொல்லுகிறார். 2iՅ