பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பக்தி, கர்மம், ஞானம் இதைப் பற்றி இங்கே சற்றுச் சிந்திக்கலாம் என்று நினைக் கிறேன். பக்தியோகம், கர்ம யோகம், ஞானயோகம் என்று வேதாந்த சாஸ்திரங்களில் மூன்று நெறியைச் சொல்வார்கள். அந்த மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இல்லாதன என்று நினைப்பது தவறு. பக்தியில்லாமல் நற்கர்மம் இல்லை; ஞானமும் இல்லை. அப்படியே நற்கர்மம் இன்றி ஞானம் இல்லை; பக்தி யும் இல்லை. ஞானம் இன்றி நற்கர்மமும் பக்தியும் இல்லை. இந்த மூன்றில் எது மிகுதியாக இருக்கிறதோ அதை எண்ணிப் பக்தி நெறி, கர்ம நெறி, ஞான நெறி என்று வழங்குவார்கள். இங்கே அப்பர் சுவாமிகளுடைய திருப்பாட்டு ஒன்றைப் பார்க்கலாம். 'ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அப்படி இருந்தாலும் எல்லோருக்கும் தெரியவில்லையே! எனக் கூறுகிறவர்களுக்குச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள். விறகு முழுவதும் அக்கினி இருக்கிறது. ஆனால் அது எப்பொழுது தோன்றுகிறது? தீப்பெட்டி இல்லாத பழங்காலத்தில் கட்டையைக் கடைந்து தீ உண்டாக்குவார்கள். விறகை எந்த இடத்தில் கடைந்தாலும் தீயானது தோன்றும். விறகு முழுவதும் இருக்கும் தீ அதைக் கடைந்தால் வெளிப்படும். பாலில் வெண்ணெய் ஒவ்வொரு துளியிலும் இருக்கிறது. அதைத் தயிராக்கிக் கடையும்போது வெண்ணெய் தோன்றுகிறது. கடையாவிட்டால் தோன்றுவதில்லை. வைரம் முதலிய மணிகள் சுடர் வீசுபவை. அவற்றைச் சாணையிட்டுக் கடைய வேண்டும். கடையாத மணி மங்கலாக இருப்பது கொண்டு அதை ஒளி யில்லாத கல் என்று சொல்லுவது முறையன்று. விறகு, பால், மணி என்னும் மூன்று விதமான பொருள்களையும் கடைந்தால் அவற்றினூடே மறைந்திருக்கும் தீ, வெண்ணெய், ஒளி ஆகியவை வெளிப்படும். அப்படியே எம்பெருமான் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற இருந்தாலும் அன்பு என்னும் கோலை நட்டு ஞானம் என்னும் கயிற்றினால் கடைந்தால் வெளிப்படுவான். 220