பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 விட்டது; இறைவனுக்குத் தொண்டு செய்ய மாட்டேன்' என்று சொல்வது சரியன்று. சீவன் முக்தன் செயல் சிவஞான போதம் என்ற ஞான நூலில் பன்னிரண்டு சூத்திரங் கள் இருக்கின்றன. அதில் கடைசிச் சூத்திரம் என்ன சொல்லி முடிக்கிறது, தெரியுமா? "செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பராடு மரீஇ மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே" என்பது அது. சீவன் முக்தர்களுக்கும் சில சமயங்களில் வாசனை வந்து தாக்கும். உடம்பு இருக்கிறவரைக்கும் அந்தத் தாக்குதலுக்கு இடம் உண்டு. அதனால் ஞானம் பெற்றுவிட்டோம் என்று அசட்டையாக இருத்தலாகாது. வாசனை வந்து தாக்காமல் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். மேலான ஞானம் பெற்ற சீவன் முக்தர்களும் வாசனா மலம் தாக்காமல் இருக்க இரண்டு காரியங்கள் செய்ய வேண்டுமாம். சிவவேடத்தையும் ஆலயத்தையும் வழிபட வேண்டும். 'சாதாரண மக்கள் இறைவன் அருளைப் பெற அவனிடம் அன்பு கொண்ட வர்களாக ஆலயத்திற்குப் போகவேண்டும்' என்று சொல்வதைக் கேட்கிறோம். ஞானம் பெற்றவர்களுக்கு வாசனா மலம் தாக்காமல் இருப்பதற்காக ஆண்டவனிடத்தில் அன்பு செய்து தொண்டு செய்யத்தான் வேண்டுமாம். இல்லாவிட்டால் நாளடைவில் உலகம் வாசனா மலத்தை அவர்களுக்கும் கொண்டு வந்து விடுமாம். இப்படி ஞான சாஸ்திரம் பேசுகின்றது. இந்த உண்மையெல்லாம் அநுபவத்தினால் உணர்ந்த அருண கிரியார், "செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர் வடிவாள்' என்றார். 'என்னிடத்தில் செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய அன்பு வாள் இருக்கிறது. அது ஞானத்திற்குப் புறம்பானது அல்ல. அதுவே அவிரோத ஞானச் சுடர் வடிவாள்' என்கிறார். 226