பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து அவன் ஆடும் போது அந்தப் பொம்மைகள் எப்படி ஆடு கின்றன? மிகவும் மெல்லிய கறுப்புக் கயிற்றினால் பின்னால் ஆடுகின்ற மனிதனுக்கும் அந்த பொம்மைகளுக்கும் தொடர்பு இருக்கும். அவன் கையையும் காலையும் ஆட்டும் போது அந்தப் பொம்மையின் கையும் காலும் ஆடும். இந்த இரண்டு பேரையும் இணைக்கும் பொருள் கயிறு. கயிற்றை வடமொழி யில் பாசம் என்பார்கள். பின்னால் இருக்கிற ஆளுக்கும், முன்னால் இருக்கிற பொம்மைகளுக்கும் பாசம் ஆகிய கயிறு தொடர்பாக இருப்பதால் அந்த மனிதன் இந்தப் பொம்மைகளை எல்லாம் ஆட்டி வைக்கிறான். பொம்மைகள் ஆடுவதற்கு இரண்டு காரணங்கள். ஒரு காரணம் பின்னால் இருக்கிற மனிதனது ஆட்டம். மற்றொரு காரணம் அவனுக்கும், பொம்மைகளுக்கும் இடையில் தொடர்பாகவுள்ள கயிறு. கயிறு அறுந்தது ஒரு கதை இங்கே நினைவுக்கு வருகிறது. நன்றாகப் பாடுகின்ற வித்துவான் ஒருவன் ஓர் அரசனிடம் வந்தான். அரசன் சங்கீதம் என்றால் பலம் எத்தனை விலை என்று கேட்கிறவன். சங்கீத வித்துவான் பாடும்போது தன் அறியாமையைக் காட்டிக் கொள்ளாமல் இருகக வேண்டுமென்று அரசன் நினைத்தான். தன் மந்திரியிடம், 'அந்தச் சங்கீத வித்துவான் பாடப் போகிறார். அவர் பாடும் போது எங்கே மிக நன்றாக இருக்கிறதோ அங்கே தலையை அசைக்க வேண்டும். எனக்கு விஷயம் தெரியாது. என் தலையோடு சேர்த்து உன் தலையையும் ஒரு கறுப்புக் கயிற்றினால் கட்டிக் கொண்டு திரைக்குப் பின்னால் நீ உட்கார்ந்து கொள். நீ தலை அசைப்பதை அக்கயிற்றினால் நான் அறிந்து கொண்டு, நானும் தலையை அசைக்கிறேன்' என்றான். அப்படியே மந்திரி செய்தான். வித்துவான் பாடும்போது அரசனும் அங்கங்கே தலை அசைத்து வந்தான். ஒர் ராகத்தை வித்துவான் மிக நன்றாகப் பாடும் போது, அந்தச் சுவாரசியத்தில் மந்திரி மிகவும் வேகமாகத் தலையை அசைத்தான். கயிறு அறுந்துவிட்டது. அரசன் வித்து வானைப் பார்த்து, 'கொஞ்சம் இரும். கயிற்றைக் கட்டிக் கொண்டு விடுகிறேன்' எனச் சொல்லிவிட்டான். அங்கே கயிறு அறுந்த பிற்பாடு அவன் நாடகமும் அறுந்துவிட்டது; நடிக்க முடியவில்லை. 13