பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் புதைத்து எருவாக்கிவிட்டால் அந்தத் தெருப் பக்கமே குப்பை வண்டிக்காரனுக்கு வேலை இல்லை. நாற்றம் அடிக்கும் குப்பை வண்டி அங்கே வராது. நமது உடம்பாகிய வீட்டில் மிகுதியான குப்பை கூளங்களை நாம் கொட்டி வைக்கிறோம். அதைச் சுத்தம் செய்யக் கூற்றுவன் வருகிறான். ஞானாக்கினியில் அக்குப்பை கூளங்களை நாமே பொசுக்கிவிட்டால் அவன் வரவேண்டிய வேலை இல்லை. வீட்டிலும், தெருவிலும் குப்பை கூளங்களைப் போடாமல் தன் வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்து விடுகிற கார்ப்பொரேஷன் என்ஜினியர் கார்ப்பரேஷன் வண்டிக்காரனைப் பார்த்து, "இனி இந்தப் பக்கமே வராதே" என அதிகாரத்தோடு சொல்வது போல, யமனைப் பார்த்துப் பேசினார் அருணகிரியார். இப்போது அது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளும்படி பாடுகிறார். நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்எந்த நேரத்திலும் கோலக்குறத்தி யுடன்வரு வான்குரு நாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்று இருப்பார்மரிப் பார்வெறும் கர்மிகளே. வெறும் கர்மிகள் மரிப்பர். காலத்தை வென்றிருப்பார் சிவ யோகிகள். சிவயோகிகள் சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார். குருநாதன் சொன்ன சீலத்தை அவர்கள் அறிவார்கள். அந்தக் குருநாதன் யார்? நீலச் சிகண்டியில் ஏறிவரும் வள்ளி மணாளன். குருநாதன் முருகனைச் சுமந்து வரத் தன் பெரிய மத்தகத்தைக் காட்டிக் கொண்டு வெள்ளை யானை காத்து நிற்கிறது. நான்கு கொம் புடைய யானை என்பர் அதை. அவனோ பறவையாகிய மயிலின் மீது வருகிறான். நீலச் சிகண்டியில் ஏறும் பிரான். நீலச் சிகண்டி - நீல நிறம் பொருந்திய மயில். சிகண்டிமயில். எத்தனை விதமான வாகனங்கள் அவனுக்குக் காத்துக் கிடந்தாலும் அவற்றை எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, நீல நிறம் பொருந்திய மயிலின் மேலே ஏறி வருகின்ற பெருமான் அவன். பக்தர்கள் அழைக்கின்ற இடங்களுக்கு அந்த 243