பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் வேண்டுமானால் தினமும் இறைவனை நினைந்து பழகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எப்போதும் இறைவனை நினைக்க இயலாவிட்டாலும் காலையும் மாலையுமாவது நினைத்துப் பழக வேண்டும். மாலையில் செய்கிற காரியம் மறுநாள் காலையில் செய்கிற காரியத்திற்குத் தோற்றுவாய். ஆகவே அருணகிரியார் சொல்கின்றார்: "அப்பா, நீ எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இல்லை. எனக்கு ஒன்று தெரியும். காலையும் மாலையும் ஆகிய இரு சந்தி வேளையில் இறைவனை நினைத்தால் போதும். அவன் எப்போதும் உன் முன்னே நிற்பான்' என்கிறார். எனக்குக் காலையும் மாலையும் முன்னிற்குமே. ஒவ்வொரு நாளும் காலை மாலை ஆகிய இரு வேளை களிலும் செய்கின்ற தியானத்தின் வாசனை உள்ளத்தில் ஏற ஏற, இறக்கிற காலம் ஆகிய மாலையிலும், பிறக்கிற காலம் ஆகிய காலையிலும் முன்னிற்கும் என்றும் பொருள் கொள்ள வேண்டும். 4 இறைவன் திருக்கோலம் காலையும் மாலையும் முன் நிற்கும் உருவம் எது? அதன் அங்கங்கள் எவை? கந்த வேள்மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்தசெச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே. இறைவனுடைய உருவத்தில் தோன்றுவனவற்றை வரிசையாக அடுக்குகிறார். “இறைவன் திருக்கோலத்தைப் பார்' என்கிறார் அருணகிரி நாதர். 'பார்த்தேன்' என்கிறான் அன்பன். 'என்ன பார்த்தாய்? செக்கச் செவேல் என்று இருக்கும் சிவந்த மேனியைப் பார்த்தாயா? அவன் இடையில் கட்டியுள்ள சிவந்த ஆடையைப் பார்த்தாயா? இடுப்பில் தொங்கும் கத்தியைப் 273