பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் ஆறாம் கல்யாணமும் பண்ணிக் கொள்வதைப் பார்க்கிறோம். தசரத சக்கரவர்த்தி அறுபதினாயிரம் மனைவிகளை மணந்து கொண்டவர். திரெளபதைக்கு ஐந்து கணவர்கள்; அதற்கு மேலும் கர்ணனிடத்தில் அவளுக்கு ஆசை இருந்ததாம். இது காமத்தின் இயற்கை. விசுவாமித்திரர் முதலிய பெரிய முனிவர்களும் காமத்தினால் அல்லற்பட்டார்கள். காம மென்னும் கடல் தோற்றத்தைக் கண்டு, தோலைக் கண்டு, மூக்கு விழியைக் கண்டு ஏமாந்து போகிறவனுக்குக் காமம் பரவுவதற்குக் காரணம் அந்தத் தோற்றமே. அதனால் காமமென்னும் கடல் மையல் செய்யும் மங்கையரின் உறுப்புக்களில் பரவிக் கிடக்கிறது என்கிறார் அருணகிரியார். சித்ர மாதர்அல்குற் படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும்.வெங் காம சமுத்திரமே. புறப் பார்வையில் படுகின்ற சரீர உறுப்பில் பரவி இருக்கிறதாம். இருவகைக் காமம் காமம் என்பதற்கு இரண்டுவிதமான பொருள் உண்டு. ஒன்று தீயது; மற்றொன்று நல்லது. தீயது மயல், நல்லது காதல். பொதுவாகக் காமம் என்ற சொல் பழைய நூல்களில் அன்பாகிய காதலுக்கே வழங்கப்பட்டது. உறுதிப் பொருள்களுக்கு இலக்கணம் வரைந்த வள்ளுவர் காமத்துப் பால் என்றே பெயர் வகுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் காமம் என்பதற்குத் தவறான பொருள் வழங்கியிருந்தால் இன்பப் பால் என வைத்திருக்கலாம். அப்படி இருக்க வேண்டுமென்றுகூட இக்காலத்தில் சிலர் சொல் கிறார்கள்; காமம் என்பதற்குத் தவறான பொருள் இப்போது ஏற்பட்டு விட்டதனால் அப்படிச் சொல்கிறார்கள். காமத்தில் நல்லதாகிய ஒன்றும், தீயதாகிய ஒன்றும் உள்ளன. அன்புடைய காமம் காதல்; அது நல்ல காமம். தீயதோவெங்காமம்; க.சொ.11-21 311