பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் குமாரனும் மாரனும் முருகனுக்குக் குமாரன் என்ற பெயர் உண்டு. மாரன் என்பது மன்மதனுக்குப் பெயர். காம உணர்ச்சியை எழுப்பு கிறவன் மாரன். குமாரன் என்பதற்கு மாரனைக் குற்சிதம் செய்யும் பேரழகுடையவன் என்பது பொருள். முருகப் பெருமானது அவதாரக் கதை நமக்குத் தெரியும். தியானத்தில் அமர்ந்திருந்த சிவபெருமானை மன்மதன் மலரம்பை விட்டுத் தியானம் கலையச் செய்தான். நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனையே சுட்டெரித்தான் சிவபிரான். அப்புறந்தான் பார்வதி கல்யாணம் நிகழ்ந்தது. பின்பே முருகப் பெருமானின் அவதாரம். ஆகவே, முருகன் பிறப்பதற்கு முன் மன்மதன் அழிந்தான். குமார ஜனனத்திற்கு முன் மார தகனம் நடந்தது. குமாரன் எங்கே இருக்கிறானோ அங்கே மாரனுக்கு வேலை இல்லை. குமாரனுடைய அருள் இருந்தால் மாரனை வென்று விடலாம். உலகத்தில் சித்திர மாதர் மையல் வலைப் பட்டு, மனமழிந்து, பலர் துன்பத்தில் துவளுவதைப் பார்த்து வருந்தி, தாமே துன்பப்படுவது போல வாடி, "இனி எனக்குத் துன்பம் இல்லை. நான் காட்டிலுள்ள குறவள்ளி நாயகனின் அருளினால் உண்டான சித்த உறுதியையே தெப்பமாகக் கொண்டு சித்திர மாதர்களின் மேனி எல்லாம் படர்ந்து பரவி இருக்கிற வெங்காம சமுத்திரத்தைக் கடந்து விட்டேன்' எனச் சொல்கிறார் அருணகிரியார். அப்படிச் ச்ொல்லும் வாயிலாக, 'சித்திர மாதர் மேனியைப் பார்த்து மயங்கிப் போகிறீர்களே! வெங்காம சமுத்திரத்தில் மூழ்கிப் போகிறீர்களே அந்த ஆழமான கடலைக் கடக்க வேண்டுமானால் தெப்பம் வேண்டும். தெப்பம் குமாரனுடைய அருளால் கிடைக்கும். உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பாருங்கள். தாயாகவும், தந்தையாகவும் உலகிலுள்ள ஆண் பெண்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றே அவன் குறத்தியாகிய வள்ளியோடு, வள்ளி நாயகனாக வருகிறான். வள்ளி காந்தனைப் பாருங்கள்; தொழுங்கள்; அவன் அருள் உங்கள் சித்தத்தின் சலனத்தைப் போக்கி உறுதியை உண்டாக்கும்' என நல்லுபதேசம் செய்கிறார். ★