பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் ஆவோம். காணும் பொருளிலே இறைவன் நினைவை வருவித்துக் கொள்ள வழி கண்டுபிடிக்க வேண்டும். எங்ங்ணம் காண்பது? பாவையர் கண்ணைப் பார்த்துச் சேல் எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் செந்திலோன் திருக்கை வேல் என நினைத்து உருகினால், பாவையர் பதங்களைப் பார்த்துப் பஞ்சு எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துக் கொற்ற மாயூரம் என எண்ணி வியந்தால், பாவையர் மொழியைக் கேட்டுப் பால் எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் செந்திலோன் கால் வெட்சித் தண்டை எழுப்பும் ஒலி எனக் கேட்டு நின்றால் அந்த நினைவு நம்மை மேலே ஏற்றிவிடும். அவன் திருக்கை வேலைப் பார்த்து, கொற்ற மாயூரத்தைப் பார்த்து, அவன் வெட்சி மலரணிந்த காலில் உள்ள தண்டை ஓசையைக் கேட்டு அவன் திருவடி களைப் பற்றிக் கொண்டு தூங்கலாமே. தூங்குவதாவது தியானம் செய்தல். அதனால் இந்திரியங்கள் அடங்கி, மலம் ஒழிந்து, இன்ப துன்பமில்லாப் பெருவாழ்வாகிய முத்தி கிடைக்கும். அப்படிச் செய்யாமல் மனம் திரிகிறது. மனமே, எங்ங்னே முத்தி காண்பதுவே? 'இப்படி இருந்தால் மனமே, உனக்கு எவ்வாறு முத்தி கிட்டும்?" என்று கேட்கிறார் அருணகிரியார். ஆண்டவனது திருவடியைப் பற்றிக் கொள்பவர்களுக்கு அருள் கிடைக்கும். அதைப் பார்த்து, வணங்கி, அத்திருவடியிலேயே சிந்தனையைச் செலுத்தி உறங்குபவர்களுக்கு முத்தி கிடைக்கும். அவன் அருளை நாடி ஒடுகின்ற தவ முனிவர்கள் அவன் திருவடி எங்கே என்று தேடிப் பிடித்துக் கொள்வார்கள். பக்குவம் இல்லாதவர்கள் நெடுந்துரத்தில் இருந்தாலும், கேட்டுத் திரும்பிப் பார்த்தாவது பிடித்துக் கொள்ளட்டும் என்பதற்காக அவன் தன் திருவடிகளிலே தண்டையை அணிந்திருக்கிறான். 'ஜல் ஜல் என்ற அந்தத் தண்டை ஒலியைக் கேட்டவுடன், "அதோ, அவன் திருவடி" என ஓடிவந்து பற்றிக்கொள்ளலாம். வெட்சித் தண்டைக் காலைக் கடைசியில் வைத்தார், அதுவே இறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டியதாதலால். 339