பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வர்கள் ஞானிகள். அவர்கள் எப்போதும் மாயையாகிய பாசி மூடாத ஞானம் உடையவர்கள். மற்றவர்கள் பாசி மூடிய குளம் போன்றவர்கள். பாசியை அகற்றிவிட்டால் குளத்து நீர் தெளி வடையும். ஞானம் இருந்தும் மாயையினால் மூடப்பட்டு இழி செயல்கள் செய்து வருகிற நம்முடைய நிலை தண்ணீர் இருந்தும் பாசி மூடிய குளத்தைப் போன்றது. நம் உள்ளத்தில் எப்போதும் தெளிவு இல்லை என்று சொல்வது தவறு. வாழ்க்கை நிலையற்றது என்பது நமக்கு விளங்குகிறது. சுடுகாட்டைப் பார்க்கும்போது நாமும் இறந்து படுவோம் என்று உணர்கிறோம். மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வகையுண்டு என்று பெரியவர்கள் சொல்லும்போது நமக்கு அது உண்மையெனச் சில சமயம் விளங்குகிறது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் உழைக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. முயற்சி செய்யத் துணியும் அறிவு தோன்றினாலோ அடுத்த விநாடியே மாயை என்னும் பாசி மூடிக்கொண்டு விடுகிறது. ஆண்டவனே, உன் அருள் தர வேண்டும்' என்று வேண்டும் உணர்வு சில சமயங்களில் பிறக்கிறது. அது எப்போதும் உறுதியாக உள்ளத்தில் நிற்பதில்லை. அடுத்த கணத்தில் மறந்துபோகிறது. இந்த மறைப்பைத் திரோதாயி என்று சொல்வார்கள். ஆண்டவன் அருளால் இந்த மாயை நீங்க வேண்டும். அவனைச் சரண் புகுந் தால்தான் அவன் அருள் கிடைக்கும். உடம்பை வெறுத்தல் பெரியவர்கள், 'உடம்பு நிலையற்றது; இந்திரியங்களினால் பெறுகின்ற சுகங்கள் நிரந்தரமான பேரின்பத்தை அளிக்க வல்லன. அல்ல' என்பதை உணர்ந்து உடம்பையே வெறுத்தார்கள். உடம்பு எடுப்பதையே பிறவி என்கிறோம். பிறப்பு ஒழிந்தால் துன்பமில்லை. அதை ஒழிக்க என்ன செய்வது? "மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி" என்று மணிவாசகர் கூறுவர். பிறப்பை ஒழித்துப் பேரின்பத்தை நல்கும் பிரானுடைய திருவடிகளைப் போற்றிப் பற்றிக் கொண் டார்கள் பெரியவர்கள். 344