பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தன்னுடைய சிறிய அடிகளால் மூன்றடி வைத்தான். அருணகிரி யார் இந்த இரண்டையும் சேர்த்துச் சொல்லுகிறார். திரிவிக்கிரமர் முதலில் பெரிய அடிகளால் அளந்த பெருமானைப் பார்ப்போம். படிமாவலிபால் மூவடி கேட்டு, அன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான். பழைய காலத்துக் கதையாகையால் அன்று என்று சொல் கிறார். ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றுக்கு முன்பே நடந்த கதை, வாமனாவதாரத்து நிகழ்ச்சி இது. 'மூன்று அடி தந்தேன்' என்று மகாபலி சொன்னவுடனே விசுவரூபத்தை எடுத்துக் கொண்டு பூவுலகத்தைத் தம்முடைய பேரடியினால் ஓர் அடியாகவும், வானுலகத்தை ஓர் அடியாகவும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார் திரிவிக்கிரமர். மகாபலிச் சக்ரவர்த்தியிடம் அவர் வரும் போது வாமனராக, குறிய வடிவினராக வந்தார். தம்முடைய உடம்பை மிகவும் குறுக்கிக் கொண்டு, பார்ப்போர் அருவருத்து வெறுத்து ஒதுக்கும்படியாகக் கூனிக் குறுகி வந்தார். பல்லெல் லாம் தெரியக் காட்டிப் பிறரிடத்தில் கையை நீட்டி இரத்தல் இழிவான செயல். அப்படி இரக்கிறவன் எத்தகைய தைரியமும், பராக்கிரமும் உடையவனாக இருந்தாலும் கேட்கும்போது கூனிக் குறுகிப் போவான். தானம் வாங்கப் போன திருமால் தம்முடைய நெடிய உருவத்தோடு போகவேண்டாம்; சாதாரண மனிதனது உயர்த்திலாவது போயிருக்கக் கூடாதா? அதிலும் மிகக் குட்டை யான வாமன உருவத்தோடு சென்றார். கடவுள் எந்த விளை யாட்டைச் செய்தாலும் அதில் ஒரு நீதி இருக்கும். யாசகத்திற்கு என்று போகும்போது அவருடைய உருவமே குறைந்துவிட்டது. பிறரிடம் கையை நீட்டி யாசகம் பண்ணுகிறவர்கள் கூனிக் குறுகிப் பல்லை இளிக்கும் அவலநிலையை அடைவார்கள் என்ற தத்துவத்தை அதனால் காட்டினார். உலகத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளித்து வந்த மகாபலியை அடக்கவே அவர் போனார். அவனிடத்தில், 32