பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் அறமும் மனமும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நிற்பது அறம். அந்த அறம் உள்ளத்திலே முதலில் தோன்ற வேண்டும். அதனால் பாட்டி குழந்தையைப் பார்த்து, 'அறஞ்செய்" என்று சொல்லாமல், 'அறம் செய விரும்பு’ என்றாள். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வருகிற குழந்தை தன் பையிலுள்ள காலணாவை ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் போடுகிறது. மிக்க செல்வம் உடைய ஒருவன் லட்ச ரூபாயைத் தர்மத்திற்காக எழுதி வைக்கிறான். அது காலணா, இது லட்ச ரூபாய் என்ற வேறுபாடு இருந்தாலும் அந்தச் செயலுக்கு மூலகாரணமாக இருப்பது அவர்கள் அற நினைவு. அந்த நினைவு மனத்திலே தோன்ற வேண்டும். அறத்தில் விருப்பம் மனத்திலே தொடங்கினால் அது வாய்ப்பு நேரும்போது செயலாக வரும். மனத்தில் இல்லாமல் புறத்தில் இருந்தால் அது கணத்திலே மடிந்து விடும். நம் வீட்டிலுள்ள ரோஜாச் செடி பூக்கவில்லை. பக்கத்து வீட்டு ரோஜாச் செடி நிறையப் பூத்துக் குலுங்குகிறது. அந்தப் பூவிலே சிலவற்றைப் பறித்துக் கொண்டு வந்து, இந்தச் செடியில் ஒட்ட வைத்தால் என்ன ஆகும்? சில நிமிஷத்திற்கு அப்பால் அவை வாடிவிடும். அந்த மலருக்குச் செடியோடு ஒட்டுதல் இல்லை. செடி ரோஜாச் செடித்தான். பூ ரோஜாப் பூத்தான். ஆனால் அந்தச் செடியில் பூத்த ரோஜாப் பூ அல்ல. 'யார் யாரோ தர்மம் செய்து புகழ் அடைகிறார்களே, நாமும் புகழ் வாங்க வேண்டும்' என்று எண்ணிச் செய்கிற தர்மம் உள்ளத்திலே தோன்றாமல் புறத்தில் மாத்திரம் இருக்கிறது. செடியில் பூக்காத பூவை அதனுடன் ஒட்டி வைத்தாற்போல அமைவது அது. அதனால்தான் வள்ளுவர், 'மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்; ஆகுல நீர பிற' என்று சொன்னார். மனிதன் குற்றம் அற்ற உள்ளம் உடையவனாக இருந்தால் அதற்கு ஏற்றபடி அவன் செய்யும் அறம் சிறப்படை யும் என்கிறார். பலர் உள்ளத்தில் அன்பு உணர்ச்சி இல்லாமல் செய்யும் காரியங்கள் அறச் செயல்கள் அல்ல; தம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளும் செயல்களாம். 53