பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 என்பர். பிரபு - தலைவன். வேதம் கட்டளை இடுகிறது. ஆகவே தான் அது தலைவன் வாக்கு, பிரபு சம்மிதை ஆயிற்று. சில நெறி முறைகள் காலத்திற்குக் காலம் மாறுபடலாம். இடத்திற்கு இடம் வேறுபடலாம். நம்முடைய நாட்டில் இருக்கிற ஆசாரம் வேறு. வடநாட்டில் இருக்கிற ஆசாரம் வேறு. இவற்றை எல்லாம் கண்டு இப்படி இப்படி ஒழுக வேண்டும் என்று அவ்வப்போது வழி வகுத்துக் கொடுப்பது ஸ்மிருதி ஆகும். அது, அரசாங்கத்தார் அவ்வப்போது படைக்கிற சட்டத்தைப் போன்றது. அத்தகைய ஸ்மிருதியை 'ஸ்-ஹ்ருத் ஸம்மிதை' என்பர். 'ஸ் ஹ்ருத்' என்பது நண்பனைக் குறிக்கும். அவன் நமக்கு நல்லதையே சொல்வான். நமக்கு ஒர் உயர்ந்த நண்பனைப் போல இருந்து, நம்முடைய மனநிலை, முயற்சி இவற்றுக்கு ஏற்ப ஒழுக்க வகைகளை நிர்ணயம் செய்வது ஸ்மிருதி. அது நண்பன் வாக்கைப் போன்றது. சுருதி ஸ்மிருதிகளைத் தெரிந்து கொள்ளப் பயிற்சி வேண்டும். அத்துணைப் பயிற்சி இல்லாதவர்களும், வேதக் கருத்தைத் தெரிந்து கொள்ளும்படி அமைந்தது காவியம். அதைக் காந்தா ஸம்மிதை என்பர். மனைவியின் சொல் போன்றது என்பது பொருள். மனைவி, நாயகன் மனத்தை மாற்றுவதற்கு எவ்வளவு இங்கிதமாகப் பேசுகிறாள்! கணவனிடம், ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று சொல்வதற்குமுன், சிரித்த முகத்தோடு அவன் எப்பொழுது காரியாலயத்திலிருந்து வருவான் எனக் காத்துக் கொண்டிருக்கிறாள். வந்தவுடனே அந்த விஷயத்தைச் சொல்வது இல்லை. பலகாரம், காபி முதலியவை கொடுத்து அவன் களைப்பைப் போக்குகிறாள். அப்புறம் மெல்ல இனிமையாகப் பேசுகிறாள். அவள் பேச்சிலே இவன் குழைந்து இன்புற்று இருக்கும்போது சொல்ல வேண்டியதை மெல்லச் சொல்லுகிறாள். 'இன்றைக்கு நானும், அடுத்த வீட்டு லலிதாவும் கோயிலுக்குப் போயிருந்தோம். சுவாமி தரிசனம் திவ்யமாகக் கிடைத்தது. அங்கே பச்சைப் புடைவை கட்டிக் கொண்டு ஒருத்தி வந்திருந்தாள். எவ்வளவு அழகாக இருந்தது! விலை நூறு ரூபாய்க்கு மேல் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அறுபது ரூபாய்தானாம். லலிதாகூட அம்மாதிரி ஒன்று வாங்கிக் கொள்ளப் போவதாகச் சொன்னாள்' 74.