பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தர்மத்தில் செலவிட வேண்டும். இங்கே செய்கிற தர்மம் அங்கே பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அப்படிச் செலவிட மனம் வரும். உடனே கண்முன்னாலே பயன் கிடைக்கும் என்று இத்தகைய செயல்களில் எதிர்பார்க்க இயலாது. நல்ல காரியம் செய்யும்போது ஐயங்கள் உண்டாகின்றன. "இறைவனுக்குக் குடம் குடமாகப் பால் அபிஷேகம் செய்கிறார்களே; இதனால் என்ன பயன்? எத்தனையோ குழந்தைகள் குடிக்கப் பால் இன்றித் தவிக்கும் போது எதற்காக இப்படிப் பாலைக் கொட்ட வேண்டும்?" என்பது போன்ற சந்தேகம் எழும். அதற்குக் கண் முன்னாலே ஒரு பயனும் தோன்றவில்லை அல்லவா? “இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் உயர்வு” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. வீட்டில் குழந்தை பாலுக்காகக் கதறும் போது, இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய் என்று சொல்லவில்லை. எவ்வளவு இயலுமோ, அந்த அளவுக்குச் செய்தால் போதும். பால்வளம் நம்முடைய நாட்டில் எங்கே பார்த்தாலும் முன் காலத்தில் பசுக்கள் மிகுதியாக இருந்தன. வறுமையான வீட்டில் கூட ஒரு மாடு இருந்தது. சங்க காலத்து நூலாகிய குறுந்தொகையில், "ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை” என்று வருகிறது. ஒரு பசுமாத்திரம் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டார் வாழ்க்கை சிறப்பில்லாத வாழ்க்கையாம். அப்படி இருந்த நாட்டில் இப்பொழுது நமக்குப் பால் போதியதாக இல்லை. பால், தயிர், நெய் ஆகியவற்றில் எதுவும் சுத்தமானதாகக் கிடைக்கவில்லை. நம்முடைய வாழ்க்கை சீருடைய வாழ்க்கை ஆகாது. வறுமை மிகுதியான வீட்டில் ஒரு மாடாவது அந்தக் காலத்தில் இருக்கும் என்றால் எத்தனை பசுக்கள் நாட்டில் இருந்திருக்கும்! "வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்' என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள். மனிதர்களுடைய தொகையைக் காட்டிலும் அதிகமாகப் பசு மாடுகளின் தொகை இருந்தமையால், தேவைக்கு அதிகமான பால் மிகுதியாகக் கிடைத்த காலம் அது. 86