பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகப் பெருமானுடைய திருவருளில் ஈடுபட்ட அருணகிரி நாதர், பக்தி பழுத்த மனத்திலிருந்து கனிந்து அமுதூறிய பாடல்களைப் பாடியருளினார். அந்தப் பாடல்களைப் பரிவுடனும் பக்தியுடனும் படிக்கும்போது அந்த அன்பு மலர்ந்து மணக்கும் அநுபவத்தைப் பெறுவார்கள். வெறும் புலமைத் திறத்தை மட்டும் காட்டும் பாடல்களில் இந்த மன நிறைவு இருப்பதில்லை. திருக்கோயிலில் அழகாக அலங்காரம் செய்த மூர்த்திக்கு விரிவான பூசை நடக்கும்பொழுது மனத்தை வேறு இடங்களில் அலைய விடாது, அந்தப் பூசையில் ஈடுபட்டு நெடுநேரம் இருந்து தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போது ஒருவகையான கிளர்ச்சி நம் உள்ளத்தே உண்டாகிறது. வீட்டுக்கு வந்த பிறகும் நம்முடன் கோயிற் சூழ்நிலை சில நேரத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. அப்போது உண்டாகும் மன நிறைவிலே ஒரு பிசிர் இல்லாத இன்பம் இருக்கிறது. அதுபோல, இன்னும் அதைக் காட்டிலும் மிகுதியாகவே, அருணகிரிநாதர் திருப்பாட்டைப் படிக்கையில் ஒருவகை இன்ப உணர்ச்சி உண்டாகிறது. வாய்விட்டுப் படித்தால் அப்போது அது நன்றாகத் தெரியும். மனப்பாடமாகித் தனியே இருந்து வாயாரப் பாடினால் அப்போது உண்டாகும் உருக்கம் தனியான சிறப்புடையது. யாரேனும் நன்றாகப் பாட அதைக் கேட்டால் உடம்பில் ஒரு கிளு கிளுப்பு ஏற்படுகிறது. இதை முருகன் அடியார்கள் உணர்ந்திருப்பார்கள். தாளம் வேண்டாமல் எளிதிலே பாடுவதற்கு ஏற்றவையாக இருப்பவை கந்தர் அலங்காரப் பாடல்கள். அவற்றின் பொருளை உணர்ந்து வாயாரப் பாடும் நமக்குச் சற்றே உடற்பாரம் குறைவதுபோல் இருக்கிறது. அந்தப் பாடல்களைப் பாடும் நமக்கே ஓரளவு இன்பம் பிறக்குமானால் அவற்றை இறைவன் க.சொ.111-9