பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வணங்க வேண்டும் என்பதையும் ஐந்தாம் பாடல் கைகளால் அவனைத் தொழ வேண்டும் என்பதையும், குறிப்பிக்கின்றன. ஆறாம் பாட்டு, இந்த உடம்பு அழியுமென்றும் இறைவன் திருவடியே அழியாத புகலிடமென்றும் புலப்படுத்துகிறது. திருமால் முருகன், மயிலேறிய மாணிக்கம், மாமயிலோன், செவ் வேலவன், குருதேசிகன், குமாரன், சிவபிரான் மகன், முருகன், கிரிதுளைத்தோன் என்று முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி நாதர். முருகன் திருவருள் கிடைக்குமானால் இவ்வுலகில் உதித்து உழன்று சாவது தீரும்; மனம் அழியும்; தலையெழுத்து அழியும், வீடு எய்தலாம் என்ற உண்மைகளை இப்பாடல்களில் காணலாம். திருமாலின் பெருமை இரண்டு பாடல்களில் வருகின்றன. அவர் அமுதம் கடைந்ததை, "வெற்பு நட்டு உரகபதித் தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான்' என்று பாராட்டுகிறாதர். அவர் சேஷ சயனராக இருக்கும் கோலத்தை, 'காலே மிக உண்டு காலே இலாத கணபணத்தின் மேலே துயில் கொள்ளும் மாலோன்” என்று காட்டுகிறார். இராமாவதாரத்தில் சேது பந்தனம் செய்ததை, “கவியாற் கடல் அடைத்தோன்' என்பதில் கூறுகிறார். சிவபெருமானை, “கணபணக்கட் செவியால் பணியணி கோமான்' என்கிறார். முருகன் கடல் சுவற வேலெறிந்ததையும் கிரவுஞ்ச மலையைத் துளைத்ததையும் சூரனைச் சங்கரித்ததையும் இந்தப் பாடல்களில் அருணை முனிவர் எடுத்துரைக்கிறார். பிறருடைய குறைகளைத் தம் குறையாகச் சொல்லிக் கொள்ளும் இயல்புடைய அவர் தாம் பாலனைய மொழியார் இன்பத்தைப்பற்றி மால் கொண்டதாகவும், குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலை தமக்கு வாய்த்ததாகவும், முருகனைப் போற்றி அன்பிற் குவியாக் கரங்கள் தமக்குக் கூடியனவாகவும் கூறுகிறார். ஆனால் ஓரிடத்தில், "ஒரு வீடு எய்தி நிற்க நிற்கும் குணம் காட்டி ஆண்டவன்" என்ற உண்மையையும் வெளிப்படுத்தி விடுகிறார். 122