பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் 1 கந்தர் அலங்காரச் சொற்பொழிவு தொடங்கிச் சரியாக ஓர் ஆண்டு ஆயிற்று. ஒவ்வோர் ஆண்டின் வளர்ச்சியையும் கணக்குப் பார்க்கும்போது உலகத்து மக்கள் தம் வீட்டில் பிறந்த குழந்தைகள், வியாபாரத்தில் சேர்ந்த ரூபாய், கட்டிய வீடுகள், வாங்கிய நிலங்கள் இவற்றைக் கொண்டு பார்ப்பார்கள். ஆனால் இந்த அடியார்கள் கூட்டத்தில் நாம் பார்க்கிறது ஆண்டவனுடைய அலங்காரம் எவ்வளவு பார்த்திருக்கிறோம் என்கிற கணக்குத் தான். இன்றைக்கு 39-ஆவது பாட்டைப் பார்க்கப் போகிறோம். காப்புப் பாடலோடு 40 பாடல்கள் ஆகின்றன. ஐந்துக்கு இரண்டு பழுது இல்லை என்று பார்க்கிற இந்த உலகத்தில், 52 வாரங் களில் 40 பாட்டுப் பார்த்திருக்கிறோம் என்பது ஒன்றும் பழுது இல்லை அல்லவா? முருகப்பெருமானின் திருவருளினால் 40 பாடல்களாவது பார்க்க முடிந்ததே என்று மகிழ்ச்சி அடையலாம். பஞ்சாமிருதத்தை வெள்ளிப்பாத்திரத்தில் வைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். வெள்ளிப் பாத்திரம் இல்லை. பிறருக்கு ஈய ஒரு பாத்திரம் வேண்டும்; ஈயப்பாத்திரம் ஒன்று இருந்தால் போதும். அத்தகைய ஈயப் பாத்திரம் ஒன்று உங்களுக்குக் கிடைத் திருக்கிறது. ஈயப் பாத்திரத்தில் வைத்துக் கொடுத்தது என்பதனால் பஞ்சாமிருதம் சுவை குன்றிவிடுமா? பாத்திரம் நன்றாக இல்லா விட்டாலும் அருணகிரி நாத சுவாமிகள் தந்த கந்தர் அலங்காரப் பஞ்சாமிருதம் உங்களுக்குச் சுவை அளிக்கும். பஞ்சாமிருதம் என்பதற்கு ஐந்து பொருள்கள் கலந்த அமிருதம் என்று பொருள். ஆறுமுகப் பெருமானுக்குப் பஞ்சாமிருதம் விருப்பம். பழனியில் பஞ்சாமிருத அபிஷேகம் சிறப்பாக இருக்கும். அருணகிரி நாத சுவாமிகளும் தமிழ்ப் பஞ்சாமிருதம் செய்தார். ஐந்து இலக்கணங்கள் பொருந்தியது தமிழ் என்று சொல்வார்கள். ஆறுமுகநாதன் ஐந்து