பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தான். வேதம் சொல்லியிருப்பதை எல்லாம் தோத்திரம் சொல் கிறது. ஆனால் வேதத்தில் இல்லாத சில அநுபவ விஷயங்களும் தோத்திரத்தில் இருக்கின்றன. அந்தத் தோத்திரத்தை யாரிடத்தி லிருந்து பெறுகிறோமோ அவர்களுடைய சொந்த அநுபவங்களுக்கு ஏற்ப அது பின்னும் உயர்ந்திருக்கிறது. அப்படி அருணகிரியாருடைய அநுபவத்தின் பொங்கலாக விளைந்தது தான் கந்தர் அலங்காரம். நல்ல புலமை உள்ளவர்கள் பல பாடல்களைப் பாடலாம். அநுபவம் இல்லாத வெறும் புலமை உடையவர்கள் பாடிய பாடல்களை நாம் பாடும்போது நம் மனம் குழையாது; கரை யாது. புலமை இல்லாவிட்டாலும் அநுபவ முதிர்ச்சி பெற்ற ஞானவான்களின் வாயிலிருந்து வரும் பாடல்களில் மனத்தையே நெகிழ வைக்கும் தன்மை இருக்கும். அத்தகைய பாடல்களில் இலக்கண அமைதி இல்லாமலிருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இலக்கண அமைதி ஒரு தமிழ்ப் புலவருக்கு ஒரு சின்ன குழந்தை. அவர் வீட்டிற்குள் நுழையும்போது, 'அப்பா, நாளைக்கு வந்தாரே ஒரு மாமா, அவர் நேற்று வருவாரா அப்பா?' என்று கேட்கிறது. 'நாளைக்கு என்பது எதிர்காலம். நாளைக்கு வந்தாரே என்று இறந்த காலத்தில் சொல்வது பிழை. நேற்று என்பது இறந்த காலம். அதோடு வருவாரா என்று எதிர்கால வினை வருவது பிழை. ஏனடா பிழையாகச் சொன்னாய்?" என்று தம் குழந்தை யின் கன்னத்தில் அடிப்பாரா அந்தப் புலவர் அக்குழந்தை வாரித் தூக்கி முத்தமிட்டுக் கொள்வார். தம்முடைய குழந்தையின் இனிய சொற்களைக் கேட்கும்போது அவர் மனம் குழைகிறது; அன்பு பொங்குகிறது. அன்பு மீதுர்ந்து மனம் குழைந்துவிட்டால் குற்றமா தோன்றும்? இப்படித்தான் ஞானிகள் தங்களுடைய அநுபவத்தைச் சொன்ன பாடலைப் பார்க்கும்போது அதிலுள்ள இலக்கணக் குறைபாடுகளை நீக்கிப் பார்த்தார்கள் பெரியோர்கள். சில புலவர்கள் அக்காலத்தில் அருணகிரியாரின் பாடல்களிலும் இலக்கணக் குறைகள் உள்ளன என்று சொன்னார்கள். 130