பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து என்பதை நீதிபதியாக இருந்து நிறுவினவன் முருகன். இப்படிப் பல வகையாலும் தமிழை ஒளிமிக்கதாக அவன் வளர்த்ததற்குக் காரணம் தன் அழகிய பாதத்தைத் தமிழிலே பாடவேண்டுமென் பதற்காகத்தான். ஆகையால் அருணகிரியார் அழகிய பெருமானை அழகான தமிழால் அலங்காரம் செய்தார். சொல்லாகிய வாடா மலர்களால் தொடுத்த அலங்கார மாலையைச் சூட்டி அப்பெரு மானின் திருவருள் எல்லார் உள்ளங்களிலும் பதிவு பெறும் வண்ணம் செய்தார். 2 பிள்ளைத் தமிழ் ஆண்டவனுக்குச் சொல் மாலைகளால் அலங்காரம் செய்யும் போது, தமிழில் எத்தனை வகையான அழகுகள் உண்டோ அத்தனை வகைகளாலும் அலங்காரம் பண்ணிக் களிப்பார்கள் புலவர்கள். பெரிய கடவுளையும் சிறு குழந்தையாகப் பாவித்து வர்ணித்துப் பாடுகின்ற சிறுநூலுக்குப் பிள்ளைத் தமிழ் என்று பெயர். முருகப் பெருமானைக் குழந்தையாகப் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றென்றைக்கும் அவன் குழந்தைதானே? அவனுடைய திருமேனிக்கு அலங்காரம் பண்ணும்போது குழந்தை யின் திருவிளையாடல்கள் பலவற்றையும் பாடுகிறார். அத்தகைய பாடல்களை முன்னாலே பார்த்தோம். சரவணப் பூந்தொட்டிலில் ஏறிப் பாலுக்காக அறுவர் கொங்கை விரும்பி விம்மி விம்மி அழுகின்ற குழந்தையாகப் பார்த்தோம். அப்புறம் கிண்கிணி ஓசை படத் திடுக்கிட்டு அரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும் கனகப் பருவரைக் குன்றும் அதிர அசைந்த அழகைப் பார்த்தோம். அதற்கு அப்பால் எம் பெருமான் எழுந்து உட்கார்ந்து கொண்டு பன்னிரண்டு கைகளையும் சேர்த்துச் சப்பாணி கொட்டும் ஷண்முகநாதனாக விளங்குவதைப் பார்த்தோம். சிற்றிற் பருவம் இப்போது அவன் தளர் நடை போடுகிறான். அவனுடைய சின்னஞ்சிறு திருவடி பட்ட மாத்திரத்திலே என்ன அற்புதம் நிகழ்ந்தது என்பதை இந்தப் பாட்டிலே சொல்ல வருகிறார். 3.49