பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை வில்லை. கத்தி மார்பிலே பாய்ந்த போது அவருக்கு வலி இருந்திராதா? நிச்சயமாக இருந்திருக்கும். தம்மைக் கத்தியால் குத்தியவன் வஞ்சகன், சிவனடியார் வேடத்தைப் புனைந்து தன் முன் நிற்கிறான் என்பதை அவர் உணரவில்லையா? உணர்ந்தார். இருந்தும் அவன் சிவவேடம் கலையாமல் நின்றான். ஆகையால் அவனைத் தொழுதார். அவனை ஒடிவந்து தாக்கப் போன காவலாளியாகிய தத்த னிடம், 'தத்தா, இவர் நம்மவர். இவருக்கு எவ்விதத் தீங்குமின்றி நீயே துணையாகச் சென்று வெளியே விட்டுவிட்டு வருவாயாக' என்று பணித்துக் கீழே விழுந்தார். மெய்ப்பொருள் நாயனாரின் இருதயத்தில் ஊன்றி நின்ற கொள்கை அபிமானத்திற்கும், அவரது சரீர அபிமானத்திற்கும் நடந்த சண்டையில் சரீர அபிமானம் செத்தது; அவருடைய உடம்பு இறந்தே விட்டது. ஆயினும் அவர் லட்சியம் வென்றது. 'தங்கள் ஆணைப்படியே அவனை ஆபத்து இன்றி ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டு வந்தேன்' என்று தத்தன் மீண்டு வந்து சொல்லும் அளவும் உயிரைத் தாங்கி நின்றார். அதனால் மெய்ப்பொருள் நாயனார் வென்றார். தொழுத கையைக் கடைசி வரையிலும் பிரிக்காது, தம் கொள்கையிலே கொண்ட முறுகிய காதலால் சரீர அபிமானம் செத்துப் போகச் செய்து மெய்ப்பொருள் நாயனார் வென்றார். ஆகவேதான், "மெய்த்தவ வேட மேமெய்ப் பொருளெனத் தொழுதுவென்றார்" என்கிறார் சேக்கிழார். அவருக்குச் சரீர வேதனை இல்லாமற் போகவில்லை. ஆனால் அதனைப் புறக்கணித்தார். இந்த ஊன் நிறைந்த உடம்பை அவர் உறுதியினால் விட்டவரானார். இறைவன் திருவருளால் மனத் திண்மை பெறாத மக்கள் உடம்பாகிய கருவியைப் பொல்லாத வழியிலே பயன்படுத்திச் சொல்ல முடியாத தொல்லைகளை அநுபவிக்கிறார்கள். பிச்சைக் காசுக்கு ஆசைப்படும் மனம் புற உடம்பிலே விழுகின்ற கீறல் காயங்களை உணராமல் மரத்துப் போவது போல, வெற்றியிலே கொண்ட காதல் மனம் மார்பில் பாய்கின்ற வேலினால் உண்டாகும் துன்பத்தை உணராது மரத்துப் போவது போல, முத்திநாதனின் சிவவேடமே மெய்யெனக் 184