பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 சும்மா இராது. ஆனால் சிவாசாரியாரின் கை ஆண்டவன் திருத் தாளில் மலரை எடுத்து அர்ச்சித்துக் கொண்டிருக்கிறது. பண் டாரத்தின் கை நல்ல மண மலர்களை எடுத்து எடுத்து மாலை கட்டி ஒவ்வொரு கால பூஜைக்குள் ஆலயங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் குரங்குகளின் கை அப்படியா? கட்டின மாலையைப் பிரித்து, கிடைத்த பொருளைப் பிய்க்கிறது. அத்தகைய குரங்குகளை இராமன் ஆட்கொண்டான். பிரித்து எறிகிற குரங்குகளின் கையே பாலத்தைக் கட்டின. இராம சந்திர மூர்த்தி அவற்றை ஆட்கொண்டிராவிட்டால் அவற்றினிடம் குரங்குப் புத்திதான் இருக்கும். குரங்குப் புத்தி குரங்குப் புத்தி எப்படி இருக்கும் என்பதைக் கம்பர் ஒர் இடத்தில் காட்டுகிறார். ஆஞ்சநேயன் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு இலங்கை வருகிறான். இலங்கை முழுவதும் தேடிப் பார்த்தும் அவள் இருக்கும் இடத்தைக் காண முடியவில்லை. 'இன்னும் எங்கே பார்க்கலாம்? நாம் என்ன செய்வது? என்று மிக்க வேதனையுடன் இருக்கிறான். நிச்சயமாக நான் சீதாபிராட்டியைக் கண்டுபிடித்து வருவேன் என்ற நம்பிக்கையால் அல்லவா இராமபிரான் நான் புறப்பட்டு வரும்போது தனியே அழைத்துச் சீதாதேவியின் அங்க அடை யாளங்களைச் சொல்லிக் கணையாழியையும் கொடுத்தார் நானோ இந்த நிலையில் இருக்கிறேன். அவர் ஒவ்வொரு கணமும் நான் சீதா தேவியைக் கண்ட செய்தியோடு வருவேன் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருப்பாரே!” என்று எண்ணுகிறான். 'கண்டுவரும் என்றிருக்கும் காகுத்தன்' என்பது கம்பர் வாக்கு. உடனே ஆஞ்சநேயனுக்கு வேறு ஓர் எண்ணம் வருகிறது. ‘எங்கள் அரசன் ஆகிய சுக்கிரீவன் தன் ஆணைக்கு அடங்கிய பலர் இருக்கவும், என்னை அழைத்துத் தெற்கே போ என்று சொன்னான். என்னிடம் அவனுக்கு எத்தனை நம்பிகை சீதையை இராவணன் எங்கே ஒளித்து வைத்திருந் தாலும் நான் கண்டு பிடித்துத் தூக்கிக் கொண்டு வந்து விடுவேன் என்று அவன் நினைத்திருக்க வேண்டும். அவனும் என்னையும் சீதையையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்." 204