பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் – 3 மலருடும் அவன் இருப்பதைக் கண்டார். உலகிலே பார்க்கின்ற பொருள்களிலெல்லாம் அவனைக் காணும் நிலை அது. அந் நிலையை அடைந்துவிட்ட தாயுமானவர், “ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி' என்று பரவசம் எய்தினார். ஆண்டவனை மலரூடு பார்த்தவுடனே அவனைக் கும்பிட எண்ணி இரண்டு கையையும் எடுக்கப் போனார். கும்பிடப்போன அவர் கைகள் தளர்ந்துவிட்டன. காரணம் என்ன? உலகத்திற்கு அப்பாற்பட்ட பொருளாக இறைவனைக் கருதி அவனை ஒரு சிறு வடிவத்தில் ஆவாகனம் செய்து வழிபட்ட நிலையில் இருந்த அவருக்குப் பார்க்கின்ற பொருள்களில் எல்லாம் அவனைக் காணும் நிலை வந்தது; பறிக்கப் போன மலரூடே அவனைக் கண்டு கும்பிடப் போனார். அப்போது அவருக்கு மூன்றாவது நிலை வந்து விட்டது. "அப் பனிமலர் எடுக்கமனமும் நண்ணேன்' என்று, தூக்கிய கையைத் தளரவிட்டுவிட்டார். அப்பனி மலரிடையே இருந்த இறைவனை அவர் தம் அகமலரிலும் கண்டார். அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனைக் காணும் மூன்றாவது நிலைக்கு உயர்ந்துவிட்டார். பனி மலரில் இருக்கும் இறைவனை வழிபடக் கையைக் குவிக்கும்போது அந்தக் கும்பிடு குவித்த கைகளுக்குப் பின்னே அகமலரில் இருக்கும் இறைவனையும் கும்பிட்டதாக ஆகாதே! முன்னும் பின்னும் உள்ள ஈசனை ஒரே சமயத்தில் கும்பிட்டால் அது முழுக் கும்பிடு ஆகும். அகமலரில் உள்ள ஈசனைக் கும்பிடாமல், புற மலரில் உள்ள ஈசனை மாத்திரம் கும்பிட்டால் அரைக்கும்பிடுதானே ஆகும்? இதனை எண்ணி நாணமுற்று, 'எப்படி அப்பா உன்னைக் கும்பிடுவேன்?' என ஏங்கிச் செயலற்று அப்படியே நின்று விட்டார். “பண்ணேன் உனக்கான பூசைஒரு வடிவிலே பாவித்து, இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி; அப் பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்; அலாமல்இரு கைதான் குவிக்கஎனில் நாணும்என் உளம்நிற்றிc; நான்கும்பி டும்போது அரைக்கும்பிடு ஆதலால் நான்பூசை செய்தல் முறையோ?” என்று பாடுகிறார். 14