பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 முயற்சியும் இறைவன் கருணையும் இறைவன் ஞானமே வடிவமாக உடையவன். ஞானத்திற்கு இருப்பிடம். அவன் தன்னுடைய குழந்தைகளாகிய மக்களுக்கு ஞானம் தருவதற்கு எப்போதும் சித்தமாக இருக்கிறான். ஆனால் முயற்சி இல்லாதவனுக்கு எத்தனை கொடுத்தாலும் அது பயன் அற்றதாகப் போய்விடும். அதன் பெருமை அவனுக்குத் தெரியாது. சீரணம் பண்ணிக் கொள்ள முடியாத ஒரு பொருளைக் குழந் தைக்குக் கொடுத்து, அதனை உண்டால், அது குழந்தையின் வயிற்றை நாசம் ஆக்கிவிடும். அப்படியின்றிச் சீரணிக்கும் ஆற்றல் உடைய குழந்தையானால் அந்தப் பொருளால் இன்பத்தைப் பெறலாம். அப்படியே முயற்சி செய்யும் மனிதனுக்கு ஆண்டவன் தன்னுடைய அருளைக் கொடுத்தால் அது பயனை உண்டாக்கும். இப்படிச் சொல்வதனால் இறைவன் நம்முடைய முயற்சியின் அளவைக் கொண்டு அதற்கு ஏற்றபடி அருள்கிறான் என்று கொள்ளக் கூடாது. முயற்சி எதுவும் இன்றிச் சும்மா இருந்தால் அவன் அருள் கிடைக்காது. நல்ல முயற்சி பண்ணத் தொடங் கினால் அவன் நம்மிடத்தில் பெருங்கருணை கொண்டு பெரிய பயனைத் தருவான். தாயின் கருணை தாயினுடைய பெருமை அத்தகையது. குழந்தை ஏதேனும் ஒரு சிறிய முயற்சி செய்தால் அதனைப் பெரிதாகப் பாராட்டு கிறவள் அவள். அதுவும் செயல் செய்ய முயல்கிறதே என்பதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். சப்பாணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தை தளர் நடை பழகும்போது அதனுடைய தாய் அந்த நடையைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறாள். அதற்குக் காரணம் தளர்நடை அழகு என்பது அன்று. இனி நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை அதனால் உண்டாகிறது. தளர் நடை நடக்கும் காலுக்குத் தண்டை அணிகிறாள். அவளுடைய வீட்டுக்கு ஒருவன் ஒரு மூட்டை அரிசி கொண்டு வருகிறான். அதை உள்ளே கொண்டுபோக வேண்டும். 262