பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 'ஊனை நாடகம் ஆடுவித்தவா! உருகி நான்உனைப் பருகவைத்தவா! 'இதற்கு முன்னால் இந்த ஊனாகிய உடம்பை நீ விளையாடச் செய்தாய்; நாடகம் ஆடுவித்தாய். நான் அப்போது ஆடினேன். புண்ணிய பாவங்களைக் காரணமாக வைத்து அவற்றிற்குரிய பிறவியை எனக்குக் கொடுத்து இன்பதுன்பங்களை அடையும் படியாக நீ செய்தாய். அந்த ஆட்டத்திலேயே நான் பற்றுக் கொண்டிருந்தேன். இப்போது திருவருளால் அந்த நாடகத்தை மாற்றினாய். உன்னை நினைக்கச் செய்து உன்னையே நான் பருகும்படியாகத் திருவருள் பாலித்தாய். இது என்ன வியப்பு நீ ஆனந்த மயமானவன். நான் உருகி அந்த ஆனந்தத்தைப் பருகு கிறேன். அதற்குக் காரணமாக ஞான நாடகத்தை ஆடும் படியாகச் செய்தாய். ஊன நாடகம் ஆடும்போது வளர்ந்து வந்த வைய ஆசை ஞான நாடகம் ஆடும்போது நைந்து போயிற்று' என்கிறார். மாயாவிநோத மனோதுக்கத்தில் துன்புற்ற அருணகிரி நாதரும் சித்ர மாதரிடத்தில் ஆசை வளர்ந்து உருகினார். சிற்றின்பம் பரு கினார். அந்த ஆசை பெருகியது. மணிவாசகர் சொல்லும் ஞான நாடகமாகிய இன்ப விளையாட்டிலும் உருக்கம் இருக்கிறது; பெருக்கம் இருக்கிறது. மணிவாசகர் சொல்கிற ஊன நாடகமே, மாயா விநோதமாகிய மாயை விளையாட்டு. அவர் சொல்கிற ஞான நாடகமே ஞான விநோதமாகிய ஞான விளையாட்டு. 'ஊன நாடகம் ஆடிக் கொண்டிருக்கும்போதே ஆண்ட வனுடைய நினைப்பைப் பெற்று, அவனுடைய அருளைப் பெற வேண்டுமென்று உருகி, அந்த உருக்கத்தின் மிகுதியாலே அவ னுடைய வடிவாகிய ஞானத்தோடு தொடர்பு பெற்று அதனையே பெருக்கி ஞான விளையாடல் புரியும் நிலை வந்தால், என்றும் மாறாத இன்ப வாழ்வைப் பெறலாம்' என்பதை மணிவாசகர் ஒருவகையில் சொன்னார்; அது எனக்குக் கிடைத்தது என்றார். அருணகிரியார் வேறு வகையில், அது கிடைக்க வேண்டும் என்று கேட்கிறார். ★ 275