பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 எம்பெருமானுடைய உருவத்தைக் கண்டு கண்டு, தியானம் பண்ணி அன்பினால் உருகி நின்றால் சோதி மயமான திருவுருவக் காட்சி கிடைக்கும். கண்டமாய் இருக்கிற இந்த உருவமே எல்லை இல்லாத சோதிப் பிழம்பாகக் காண்பதற்கு மூலமாக இருக்கும். இத்தகைய அநுபவத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலியவர்கள் கண்டிருக்கிறார்கள். அருணகிரிநாத சுவாமிகள் சொல்கிறது ஏதோ கற்பனை என்று நினைக்கக் கூடாது. வளர்ச்சி முறை செயல் மாண்டு அடங்குதலும் புத்திக் கமலத்தில் உருகிப் பெருகுவதும் சிறிது சிறிதாக நிகழ்கின்ற வேலைகள்; செயல் முழுவதும் அடங்கின பிறகு புத்திக் கமலத்தில் ஊற்று எடுக்கிற தென்று கொள்ளக் கூடாது. செயல் அடங்கிக் கொண்டு வரவர, புத்திக் கமலத்தில் இன்ப ஊற்று எழும்; செயல் முற்றும் மாளும் போது பேரமுதக் காட்சி கிடைக்கிறது. செயல் சிறிது சிறிதாக அடங்கி வரும் போது இன்பம் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டு வரும். அப்போது முன்னாலே எந்தப் பொருளில் இன்பம் இருக்கிறதென்றும், எந்த எந்த முயற்சி சிறப்பு உடையதென்றும் நினைத்தோமோ அவற்றில் கண்ட சுவை எல்லாம் மாறிவிடும். முன் நிலைக்கும் பின் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரியும். பிறர் நம்முடைய பக்குவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்பது இல்லை. நம்மிடத்தில் முன்னாலே இருந்த அழுக்குச் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதும் மெல்ல மெல்ல வெள்ளம் ஏறுவதும் நமக்கே தெரியும். அறிவு இல்லாத காலத் தில் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும் போது மண்ணையும் மலத்தையும் அப்பிக் கொண்டிருக்கிறோம். எறிய வேண்டிய பொருளை வாயில்போட்டுக் கொண்டோம். குழந்தைப் பருவம் மாறியபிறகு முன்னாலே செய்தது இயற்கை என்று நினைக்க மாட்டோம். குழந்தையாக இருக்கையில் செய்யும் செயல்கள் தவறு என்ற நினைவு அப்போது வருவது இல்லை. அந்தப் பருவம் மாறின. பிறகு, இப்படியெல்லாம் பைத்தியக்காரத் தனமாகச் செய்தோமே என்ற நினைவினால் நாமே சிரித்துக் கொள்கிறோம். அந்த வகையில், செயல் மாண்டு அடங்கிவரவர, இன்ப ஊற்றுப் பெருகி வர வர, முன்னை இருள் நிலையை எண்ணி எண்ணி நாம் உள்ளே நகைத்துக் கொண்டிருப்போம். 3O4