பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'செயல் மாண்டு அடங்க' என்பதற்கு அடங்கிவர என்று பொருள் கொள்ள வேண்டும். முற்றும் அடங்கிய நிலையில் ஊற்றுத் தோன்றிய புத்திக் கமலம் மறைந்து எல்லாவற்றையும் ஒன்றாக்கிக் கொண்டு பரமானந்த வெள்ளம் தோற்றும். செயல் ஒவ்வொன்றாக மாளத் தொடங்கவே, இன்ப ஊற்றுப் பெருகி வரும். ஒன்று தேய்ந்து கொண்டு வருவதும், ஒன்று ஓங்கிக் கொண்டு வருவதும் சேர்ந்தே நிகழும். நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம். நம்முடைய செயல் தேய்ந்து வரவேண்டும். செயல் தேய்வது செயலைச் செய்யாமல் இருப்பது அன்று. பிறவிப் பிணிக்குக் காரணமான செயல்கள் அடங்கவேண்டு மானால் அதற்கு மாற்றான செயலைச் செய்யவேண்டும். நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கிப் பின்பு மெல்ல மெல்லச் செயல்களை ஒழிக்க வேண்டும். அப்போது இறைவனுடைய திருவருளால் புத்திக் கமலம் விரிந்து அங்கிருந்து இன்ப ஊற்றுப் புறப்பட்டுப் பெரும் கடலாகும். அந்தக் கடலில் ஆறுமுக அமுது தோன்றும். இப்போது நாம் காணும் ஆறுமுகம் புத்திக் கமலத்தில் இன்ப ஊற்றுத் தோன்றச் செய்யும். அப்போது காணும் ஆறுமுகம் பரமானந்தப் பெரும் கடலில் அமுதாகத் தோற்றும். அதற்கு இது வாயில். 4 ஆறுமுகம் ஆறுமுகமும் பன்னிரண்டு தோள்களும் உடைய பெரு மானைக் கோயிலில் பார்க்கிறோம். பூவாலும் அணியாலும் அலங்காரம் செய்து நம் உள்ளம் கவரும்படி செய்கிறார்கள். அந்த அலங்காரங்கள் திருமுகங்களையும், திருந்தோளையும் நம் முடைய கண்ணுக்கு அழகாகக் காட்டுகின்றன. இறைவனுடைய திருவருளில் ஈடுபட்ட பெருமக்கள் இந்த ஆறுமுகத்தைப் பற்றியும், பன்னிரண்டு திருத்தோள்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். முருகப் பெருமான் ஆறுமுகத்தையும் பன்னிரண்டு திருத்தோளையும் கொண்டு செய்கின்ற பல திருவிளையாடல்களை விரிவாகத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும், திருவகுப்பில் அருணகிரியாரும் சொல்கிறார்கள். 3O6