பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டிஅன்பாய் முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ? குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னே!வினை யேற்கென் குறித்தனையே? (கிரெளஞ்சமலை தவிடு போலப் பொடியாகும்படி வேலால் துளைத்த காங்கேயனே! என் புத்தியை அது போகும் போக்கில் விடாமல் மாற்றி உன்னுடைய திருவடிகளாகிய தாமரையிலே செலுத்தி அன்பு மயமாகி முத்தியை உன்னிடமிருந்து பெற நான் அறிந்திலேன்; பழைய சூரன் நடுங்குவதற்குக் காரணமான அந்த வேற்படையை நீ விடுவதற்கு என் புத்தி தகுதி உடையதோ? பாவம் உள்ளவனாகிய என்னைத் திருத்த நீ என்ன வழியைத் திருவுள்ளத்தில் கொண்டிருக்கிறாய்? வாங்குதல் - கைப்பற்றுதல்; போக்கை மாற்றி வளைத்தல். பாதாம்புயம் என்றதனால் புத்தியை வண்டாகக் கொள்ள வேண்டும். அன்பாய் - அன்பு மயமாகி. பழைய காலத்தில் இருந்தவனாதலின் முது சூர் என்றார். நடுங்கு அச்சத்தியை என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். சத்தி - வேல். வாங்க - விட, பிரயோகம் செய்ய. தரமோ - புத்தி தகுதியுடையதா? குவடு - மலை; இங்கே கிரெளஞ்ச கிரி. காங்கேயன் - கங்கையின் மகன். முருகனைக் கங்கை தாங்கி வந்தமையின் இப்பெயர் உண்டாயிற்று; 'ஆயிரமுகத்து நதி பாலனும்' என்பது திருவகுப்பு. வினை என்பது இரண்டு வினைகளையும் குறித்ததாயினும் இங்கே வினையேன் என்றது பாவி என்றபடி. வினையேற்கு - பாவியாகிய எனக்கு என்னைத் திருத்துவதற்கு என்பது பொருள். என் - என்ன தந்திரத்தை. குறித்தனை - திருவுள்ளத்தில் கொண்டாய்) 332