பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஆகவே அவர்களைச் சார்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய் வாயாக’ என்று அருணகிரியார் இந்தப் பாட்டில் அறிவுறுத்துகிறார். ★ சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதியன்றி வேறிலை காண், தண்டு தாவடிபோய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறிஎன்று அறியாத பாவி நெடுநெஞ்சமே! (சேனைகளோடு தாவி நடைபோட்டுச் சென்று தேரிலும் யானை யிலும் குதிரையிலும் திரிபவர் செல்வம் யாவும் நீரில் எழும் எழுத்துப் போன்றது என்று அறியாத பாவியாகிய நீண்ட நெஞ்சமே சூரன்மேலும் கிரெளஞ்ச மலையின் மேலும் சுடர்விடும் வேலை வீசியவனாகிய முருகனுடைய தொண்டர் கூட்டத்தை சார்ந்தால் நல்ல கதி உண்டாகுமே யன்றி, வேறு சார்பு இல்லை. சூர் - சூரன். கிரி - மலை; கிரெளஞ்சாசுரன். வேறு வேறு புகலிடம். தண்டு - படை தாவடி போதல் - தாவி அடியிட்டு நடத்தல். பொறி - எழுத்து.)