பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வழங்க வேண்டும் அப்பா என் ஆற்றல் பலிக்கவில்லை. ஆகவே உன்னை வேண்டிக் கொள்கிறேன்' என்கிறார் அருணகிரியார். தாழம்பூவும் மனமும் தாழம்பூவைப் பார்த்திருக்கிறோம். தனியாக இலை வேறு, பூ வேறு என்று இல்லாமல் இலையே பூவாக இருப்பது தாழம்பூ இரண்டு இலைக்கும் வேறுபாடு உண்டு. இலையில் முள் இருக்கும்; பூவில் முள் இராது. இலை பச்சையாக இருக்கும்; பூ மஞ்சளாக இருக்கும். இலைக்கு மணம் இல்லை; பூவுக்கு மணம் உண்டு. ஆனால் இலையின் நுனிப் பகுதியே பூ மேலேயுள்ள பச்சையான மணமற்ற முள் இலைகளை ஒவ்வொன்றாகக் கழித்து விட்டால் கடைசியில் மஞ்சள் நிறமான முள் இல்லாத இலை கிடைக்கும். அதற்கு மணம் உண்டாதலால் அது பூவாகிறது. அதைப் போலவே மனம் இருக்கிறது. மனத்தைச் சுற்றியுள்ள முரட்டுத்தனம், சோம்பேறித்தனம் ஆகிய படலங்களை அகற்றி விட்டால் குழைவு, சுறுசுறுப்பு ஆகிய முள் இல்லாத படலங்கள் வெளிப்படுகின்றன. அது மாத்திரம் அல்ல. அன்பாகிய நறுமணம் அதில் கமழும். நம் மனம் தாழம்பூ ஆக வேண்டுமானால் மனத்தைச் சுற்றியுள்ள வாசனை அற்ற முள் இலைகளைக் கழிக்க வேண்டும். அது நம் கைக்குள் அகப்படாமல் தப்பிப் போய்விடுகிறது. கட்டுப்பாடு நமக்கு நாமே கட்டுப்படுவது இன்பம். பிறருக்குக் கட்டுப் படுவது துன்பம். நாமே நம் வீட்டுக்குள்ளே நுழைந்து கொண்டு தாழ்ப்பாள் போட்டுக்கொள்வது பாதுகாப்பு. நம்மை உள்ளே தள்ளிப் பிறர் வெளியே பூட்டிடுவது சிறை. இரண்டு இடங்களுக்கும் வேறுபாடு பொதுவாகப் பார்த்தால் ஒன்றும் இல்லை. நான்கு பக்கமும் இரண்டு இடங்களிலும் சுவர்கள் உள்ளன. கதவு இருக் கிறது. பூட்டு இருக்கிறது. ஆனால் இங்கே போட்ட பூட்டு, பிறர் போட்டது. அங்கே போட்ட பூட்டு நாமே போட்டுக் கொண்டது. நாமே பூட்டுப் போட்டுக் கொண்டது வெளியில் இருந்து பகைவர்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக, பிறர் போட்ட பூட்டு நாம் வெளியே தப்பிப் போய்விடாமல் இருப்பதற்காக. ஆகவே முன்னால் நாம் இருக்கும் இடம் பாதுகாப்பான இடம். 4O