பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 புத்தியென்னும் சிற்றாறு நம்முடைய புத்தி வேகமாக வேலை செய்கிறது. எதைச் சார்ந்திருக்கிறதோ அதிலுள்ள அழுக்கு அதன் மேல் ஒட்டிக் கொள்கிறது. அறிவு என்பது ஒரு சிற்றாறு. அது மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறது. போகிற இடங்களில் உள்ள மலங்களை வாரிக் கொள்கிறது. உயிர்களிடம் மூன்று மலங்கள் இருக்கின்றன. ஆன்மா மலத்தைச் சார்ந்திருப் பதனால்தான் பிறவி வருகிறது. மனிதப் பிறவியில் உடம்பிலும், உடையிலும் ஒட்டிக்கொள்கிற அழுக்குப்போல உள்ளத்தில் ஒட்டிக் கொள்ளும் அழுக்கு எதுவோ அது உயிரைச் சார்ந்திருக் கிறது. மனம் இறந்து போய்விட்டால் மலமும் இறந்து போகும். அப்படிச் சொல்வதைக் காட்டிலும் மலம் என்பது போகுமட்டும் மனம் இருக்கும் என்று சொல்லலாம். மனம் இருப்பதனால்தான் மனிதன் எல்லாக் காரியங்களையும் செய்கிறான். அந்தக்கரணம் மனத்தின் கொழுந்து எதுவோ அதைப் புத்தி என்று சொல் வார்கள். மேல் நாட்டார் மனத்தின் நிலைகள் இன்னவை என்று வகுத்திருக்கிறார்கள். அவற்றையே நம் நாட்டில் மனத்தின் பகுதி களாகிய அந்தக்கரணங்கள் என்பர். வாழ்வதற்கு உரிய கருவிகள் இரண்டு வகை. கை கால்கள் முதலிய உறுப்புக்கள் புறத்தில் உள்ள கரணங்கள். மனம் உள்ளே இருக்கிற கரணம். அந்தக்கரணம் என்றால் உள்ளே இருக்கும் கருவி என்று பொருள். அந்தக் கரணம் நான்கு பகுதிகளாகப் பயன்படுகிறது. ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது அதனிடத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறோம்; அப்படிச் சிந்திப்பது சித்தம். அப்பொருளை எவ்வாறு பெறுவது என்ற அவாவினால் தவிக்கிறோம்; அப்படித் தவிப்பது மனம். ஒன்றைப் பார்த்தால் அது நல்லதா கெட்டதா என்று ஆராய்கிறோம்; அந்த ஆராய்ச்சி பிறக்கும் இடம் புத்தி. நாம் இன்னார், இன்ன ஆசாமி என்பதை எப்பொழுதும் நினைந்து கொண்டிருக்கிறோம்; தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் எழுந் திருக்கும்போது நாம் இன்னார் என்ற நினைவோடு எழுந்திருக் கிறோம்; அந்த நினைவுள்ள பகுதி அகங்காரம். இப்படி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு பகுதியாக அந்தக்கரணம் இயங்குகிறது. 52