பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் 2 இப்படிச் சொன்ன அருணகிரியார் அடுத்த இரண்டடியில் ராமபிரான் புரிந்த செயல் ஒன்றை நினைவு ஊட்டுகிறார். எத்தனையோ இடங்களில் ராமபிரானது திருவிளையாடல்களை நமக்கு நினைப்பூட்டும் வழக்கம் உள்ளவர் அருணகிரியார். அப்படிச் சொல்லும்போதெல்லாம் தாம் சொல்ல வந்த கருத்துக்குப் பொருத்தமான திருவிளையாடலைச் சொல்வார். இங்கேயும் அப்படிப் பொருத்தமான வரலாறு ஒன்றை நினைப்பூட்டுகிறார். ராமபிரான் வரலாறு இலங்காபுரிக்குப் போகைக்குநீ வழிகாட்டு என்று போய்க் கடல் தீக்கொளுந்த வாகைச் சிலை வளைத்தோன். ராமசந்திர மூர்த்தியின் வரலாறு விரிந்தது. அளவிலாத் திரு விளையாடல் புரிந்த வள்ளல் அப்பெருமான். அவர் நாட்டைத் துறந்து காட்டுக்கு வந்தார். இராவணன் அபகரித்துச் சென்ற சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு கானகத்தில் அலைந்து திரிந்தார். இலங்கையில் இருப்பது தெரிந்து அதை நாடிச் சென்றார். அப் போது விபீஷணன் வந்து அடைக்கலம் புகுந்தான். ராமபிரானுடைய வருகையை எதிர்பார்த்து ஊண் உறக்க மின்றிச் சீதாபிராட்டி இலங்கையில் தவம் கிடக்கிறாள். கடலுக்கு அப்புறம் இருக்கிறது இலங்கை. இப்புறத்தில் ராமபிரான் இருக் கிறார். கடலைக் கடந்து இலங்கைக்குப் போகவேண்டும் இதற்கு என்ன வழி என்று ராமபிரான் யோசனை பண்ணுகிறார். விபீஷணனைப் பார்த்துச் சொல்கிறார். 'நல்ல அறிவுடைய விபீஷணா, என்னுடைய தோள் வலியினால் யாராக இருந்தாலும் வென்று விடுவேன்; அதைப் பற்றிக் கவலையில்லை. இலங்கையில் உள்ள பகைவர்கள் எத்தனை பலம் உடையவர்களானாலும் நான் அஞ்சமாட்டேன். ஆனால் முதலில் இந்தக் கடலைக் கடந்து போகவேண்டுமே! நீ என்ன உபாயம் சொல்கிறாய்?' என்று கேட்கிறார். - iCŞ