பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன்பால் அன்புடையவர்கள், உலக வாழ்வை வெறுத்து மனைவி மக்களைப் புறக்கணித்துவிட்டு, தமக்கு என்று எந்த வகையான வரையறையும் இல்லாமல் இருப்பவர்கள் என்ற தவறான எண்ணம் பலருடைய உள்ளத்தில் முளைத்திருக்கிறது. பைத்தியம் பிடித்தவர்கள் எப்படிப் பிறருடைய நலந்தீங்குகளை நினையாமல் தாம் போன போக்கிலே போவார்களோ அப்படித்தான் இருப்பார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யாவரும் இறைவனுக்கு அன்பர்கள் ஆகிவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் எண்ணத்தின்படி, அப்போது உலகம் முழுவதும் பைத்தியக்காரர்கள் நிறைந்த உலகமாகிவிடும். வாழும் வகை தெரியாமல், ஒருவரோடு ஒருவர் இயல்பாகப் பழகாமல் யாவரும் கடவுள் வெறி பிடித்துப் போய், உண்ணாமல் உறங்காமல் இருப்பார்கள். அப்படி இருந்தால் மிகவும் குறுகிய காலத்துக்குள் யாவருமே இறந்துபோகும்படி நேரும். பிறகு உலகம் உலகமாக இராது. வெறும் சுடுகாடாகி விடும். ஆகையால் இறைவனிடம் பக்தி பண்ணுகிறவர்கள் ஒரு பகுதியினரே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உலகத்துக்கு ஆபத்து. இதுதான் உண்மையா? இல்லை, இல்லை. அன்பர்களும் உலகில் வாழ்கிறவர்களே, மனைவி மக்களோடு வாழ்கிறவர்களே. இறைவனுடைய தலம் உலகம் என்றும், அதில் உலவும் ஒவ்வொருவரும் அவனுடைய திருக்கோயிலென்றும் எண்ணி அன்பு செய்கிறவர்கள். பக்தன் தன்னை உயர்த்திக் கொள்வதோடு தன்னுடைய இயல்பினாலும் செயல்களாலும் பிறரையும் உயரச் செய்கிறான். அவன் நல்ல குணங்களுக்கு உறைவிடமாக இருக் கிறான். அறிவாளியாகவும் ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். தன் நலத்தைவிடப் பிறர் நலத்தையே கருதி வாழ்கிறான். அறம் செய்கிறான்; பொருள் ஈட்டுகிறான்; இன்பம் நுகர்கிறான். மற்றவர்