பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 களுக்கும் அவனுக்கும் இடையே உள்ள வேறுபாடு: அவன் எதைச் செய்தாலும் எதை நுகர்ந்தாலும் இறைவனுடைய நினைவை மறவாமல் இருக்கிறான். ஏதேனும் ஒன்று செய்தால், தான் இறைவனுடைய கருவியாக நின்று, அவன் அருளாணையின் வழியே அதைச் செய்கிறதாக உணர்கிறான். எதை அநுபவித் தாலும் இறைவன் திருவருளால் வந்த அநுபவம் என்று அதை நுகர்கிறான். இன்பம் துன்பம் என்ற இரண்டையுமே அவன் இறைவன் அருளால் விளைந்தவை என்று உவப்புடன் ஏற்கிறான். அறுசுவை உண்டியில் கைப்பும் ஒரு சுவைதான். இனிப்புப் பண்டத்தையும் நுகர்ந்து கைப்புள்ள உணவையும் உண்டு மகிழும் இயல்புள்ளவர்களைப் போல, அவன் இன்பத்தையும் துன்பத்தையும் நுகர்கிறான். கைப்பும் ஒரு சுவை; அது ஏற்கத் தகாதது அன்று. அப்படியே துன்பமும் ஏற்பதற்குரிய அநுபவமே. இன்பம் துன்பம் என்பவை அநுபவத்திற்குரிய வகைகள். ஒன்று கொள்ளுவதற்குரியது, மற்றொன்று தள்ளுவதற்குரியது என்று அன்பன் எண்ணுவதில்லை. மற்றவர்களுக்கு இன்பம் என்பது வேண்டும் நுகர்ச்சி; துன்பமோ வேண்டா நுகர்ச்சி. சோற்றில் கல் இருக்கிறது; சோறு உண்ணத் தகுந்தது: கல் ஒதுக்கத் தகுந்தது. இன்ப துன்பங்களும் இத்தகையன என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இன்பம் நுகரத் தக்கது, துன்பம் வெறுக்கத் தக்கது என்கிறார்கள். பக்தர்களோ இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு என்ற உண்மையை அறிந்து கொள்கிறார்கள். துன்பத்தைச் சோற்றினிடையே கல்லாக அவர்கள் எண்ணுவதில்லை; சோற்றோடு கலந்த குழம்பாகவே எண்ணுகிறார்கள். சமையற்காரன் சோற்றைச் சமைப்பானேயன்றிக் கல்லைச் சமைப்பதில்லை. இறைவன் நம்முடைய முன்னை வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை நமக்கு அருளுகிறான். அவை இரண்டும் நுகர்வதற்குரியன. அவற்றை நமக்கு அளிப்பவன் இறைவன் என்ற உணர்வு வரும்போது துன்பமும் இன்பமும் ஒரே நிலையை உடையனவாகத் தெரியும். குழந்தை ஓங்கி அடித்தாலும் இன்பமாகக் கொள்கிறாள் தாய். காதலன் மூச்சுத் திணற அணைத்தாலும் இன்பமாக உணர்கிறாள் காதலி. விளையாட்டிலே கைகால்களில் வலியும் வேர்வையும் உண்டானா 2