பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி இதற்காகவே ஆராதனைக் காலங்களில் நம்முடைய தேவால யங்களில் அழகான ஒரு பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களைப் போல நம்முடைய கோயில்களிலும் மெளன மாக எல்லோரும் நின்று வழிபடுவது சிறந்ததுதான். என்றாலும் எல்லோரும் ஒரே சமயத்தில் ஒரே விதமான பாட்டைத்தான் சொல்லி வழிபடவேண்டும் என்கிற பழக்கம் நம்நாட்டில் இல்லை. ஒருவர் திருப்புகழ் சொல்வார். மற்றொருவர் அநுபூதி சொல்வார். கந்தர் அலங்காரத்தை மனம் உருகிப் பாடி நிற்பாரும் உண்டு. இவற்றில் ஒன்றுமே சொல்லாமல், 'ஆண்டவனே! எனக்கு உன்னுடைய அருளைத் தர மாட்டாயா? அல்லல்பட்டு அவதியுற்று எத்தனை காலம் இவ்வுலகில் துன்புறுவேன் அப்பா' என்று மனம் நைந்து இறைஞ்சுபவர்களும் இருப்பார்கள். இத்தனை குரல்களும் எழுந்தால் கோயில் எப்படி இருக்கும்? இந்த எல்லாச் சத்தமும் தீபாராதனை சமயத்தில் கேட்காமல் இருக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டுவிடுகிற வேறு ஒரு பெரிய இசைநாத வெள்ளம் ஒட வேண்டும். இதற்காகத்தான் நாகஸ்வரம் என்னும் அருமையான ஊதுகுழலைக் கண்டுபிடித்தார்கள் நம் நாட்டவர்கள். நாகஸ்வர வாத்திய இன்னிசை எல்லா ஒலிகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு எழும்பும் போது நாம் அதன் சுருதி யோடு கலந்து லயித்து விடுகிறோம். தியானம் சுலபமாகச் சித்திப்பதற்காக ஓங்கார நாதத்தைச் சுருதியோடு உள்ளே எழுப்பிக் கொண்டு லயித்தால் புற ஒலி நம் அளவில் அடங்கும். புறச்சத்தம் எதுவும் காதில் விழாதவாறு காது குப்பென்று அடைக்கிற மாதிரி இருக்கும் என்று ஒருவகை அநுபவத்தைச் சிலர் சொல்வார்கள். முதலில் நாம் கண்ணை மூடிக்கொண்டால் ஒரே இருளாகத் தான் இருக்கும். ஆண்டவன் திருக்கரத்திலுள்ள வேலை நன் றாகப் பார்க்க வேண்டும். பார்த்த வேலை மெள்ளக் கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் வைத்துப் பார்க்க வேண்டும். கொஞ்சம் வேல் நிற்கும். அப்புறம் அதே வேல் ஜோதி மயமாக நிற்கும். இப்படியே, நாதவடிவாகிய ஓங்காரம் ஒளி எழுத்து வடிவமாக, பிறகு ஜோதிர்மயமாக இருக்கும். நம்முடைய குரு நாதர் அருணகிரியார் அப்படிச் சொல்கிறார். 137