பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் குள்ளே சதா காலமும் முருகன் திருவுருவம் கண்டு தூங்கலாம்; இந்த இரண்டுக்கும் முரண்பாடு இல்லை. செவி படைத்த பயன் செவி படைத்த பயனே இறைவனுடைய புகழைக் கேட்டுக் கேட்டு உருகுவதுதான். இறைவன் புகழைக் கேளாத செவி ஓயாது இழவுச் செய்தியைக் கேட்கும் செவி என்று வள்ளலார் பாடுகிறார். "கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்து இழவு கேட்கும் செவி' இறைவனுடைய புகழைத் தெரிந்து கொண்டு நாமாகக் கவி பாடுவது எளிதன்று; பிறர் பாடியதைக் கேட்டு இன்புறலாம் அல்லவா? கிழியும் படிஅடல் குன்றுஎறிந் தோன்கவி கேட்டுஉருகி, இழியும் கவிகற்றிடாது இருப் பீர்;எரி வாய்நரகக் குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச்செல்லும் வழியும் துயரும் பகரீர் பகரீர், மறந்தவர்க்கே. (வலிமையுடைய கிரெளஞ்சமலை கிழியும்படி அதன்மேல் வேலை எறிந்தவனாகிய முருகப் பெருமானைப் பற்றிய பாடல்களைக் கேட்டு உருகி, இழிவான நிலையை உண்டாக்குவனவாகிய தாழ்ந்த பாடல்களைக் கற்றிடாமல் வாழுங்கள்; இவற்றால் இன்ன பயன் உண்டு என்பதை மறந்தவர்களுக்கு, நெருப்பைத் தன்னிடத்தே கொண்ட நரக மென்னும் பள்ளத்தையும் அதனால் விளையும் துயரங்களையும், இறந்தபின் தாகம் உண்டாக யமனுடைய ஊருக்குப் போகும் வழியையும் அங்கே உண்டாகும் துயரங்களையும் சொல்லுங்கள், சொல்லுங்கள். மக்களைப் பார்த்து உபதேசம் செய்கிற முறையில் அமைந்திருக்கிறது பாட்டு. கிழிதல் - பிளத்தல், அடல் - வலிமை, குன்று - கிரெளஞ்சமலை. எறிந்தோன் - தாக்கினவன். இழியும் - இழிவான போக்கிலே செல்லும்; தாழ்வான உணர்ச்சிகளை உண்டாக்கும். விடாய் - தாகம்) இது கந்தர் அலங்காரத்தில் ஐம்பத்தாறாவது பாடல். 165