பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் 1 நீண்ட பயன் எந்த அறிவாளியும் தான் செய்கிற காரியம் ஒவ்வொன்றும் தனக்குப் பல காலத்திற்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவான். ஒரு நாளைக்கு மட்டும் சோறு சமைத்துச் சாப்பிடுகிறவன் அன்றாடம் காய்ச்சி. பல காலத்துக் கும் பொருள் சேகரித்து வைத்துக் கொண்டு சுகமாகச் சாப்பிடு கிறவன் செல்வன். "இது என்ன, அன்றாடம் காய்ச்சி வாழ்வு' என்று பழிப்புச் செய்கிற்து உலகம். ஆனால் பல காலத்திற்குப் பலவகையில் பயன்படுகிற காரியத்தைச் செய்கிறவனை அறிவாளி என்று பாராட்டுகிறது. அடுத்த ஆண்டுக்கு ஆடை வாங்கி வைத்துக் கொள்ளு கிறோம். பெண் பிறந்துவிட்டால், கல்யாணம் பண்ண வேண்டுமே என்று முன்கூட்டியே பணம் சேமிக்கிறோம். இவற்றையெல் லாம் நெடுங்காலத்திற்குப் பின்னே பயன்பட வேண்டும் என்பதற்காக இப்போதே செய்கிறோம். இவை அறிவுடையவன் செயல்கள். - நம்முடைய உடம்பு நிலையானது அல்ல என்று நமக்குத் தெரியும். ஆயுளைப் பொறுத்து உடம்பு இருக்கிறதே தவிர உடம்புக்காக ஆயுள் இல்லை. உயிருக்கு இறுதி கிடையாது. என்றைக்கு இறைவனோடு ஒன்று படுகிறதோ அன்றைக்குத்தான் அதன் பயணம் முடிவடைகிறது. அந்த உயிருக்குப் பயன்படுகிற பொருளைச் சேமித்து வைக்க வேண்டாமா? நம்முடைய கைப் பொருளை யாசிப்பவர்களுக்கு இட்டு வைத்திருந்தால் அது நமக்குப் பின்னால் உயிருக்குப் பயன் அளிக்கும் என்று இந்தப் பாட்டில் சொல்ல வருகிறார் அருணகிரியார்.